NATIONAL

சொத்துகளை அறிவிக்கத் தவறியதாகத் துன் டாயிம் மனைவி மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜன 23 – மெனாரா இல்ஹாம் கட்டிடம் மற்றும் கோலாலம்பூர், பினாங்கிலுள்ள பல சொத்துகளை அறிவிக்கக் கோரும் அறிக்கையைப் பின்பற்றத் தவறியது தொடர்பில் துன் டாயிம் ஜைனுடினின் மனைவி தோ புவான் நா‘யிமா அப்துல் காலிட்டுக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி அஸூரா அல்வி முன்னிலையில் தமக்கெதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை அந்த முன்னாள் நிதியமைச்சரின் மனைவி மறுத்து விசாரணை கோரினார்.

சொத்துகளை அறிவிக்காதது தொடர்பில் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்.) ஆணையர் அந்தஸ்து கொண்ட அதிகாரி ஒருவர் வழங்கிய அறிக்கையின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் வேண்டுமென்றே சத்தியபிரமாண வாக்குமூலத்துடன் கூடிய அறிக்கையைக் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வழங்கியதாக அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

மெனரா இல்ஹாம் கட்டிடம், இரு நிறுவனங்களான இல்ஹாம் டவர் சென்.பெர்ஹாட் மற்றும் இல்ஹாம் பாரு சென். பெர்ஹாட், இரு மெர்சிடிஸ் பென்ஸ் ஆடம்பரக் கார்கள், பெர்சியாரான புக்கிட் துங்குவில் உள்ள ஒரு வீடு, பினாங்கு மற்றும் தலைநகர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள லாட் நிலங்கள் ஆகியவையே அவர் பிரகடனப்படுத்தத் தவறிய சொத்துகளாகும்.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி புத்ரா ஜெயாவிலுள்ள எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் வெள்ளிக்கும் மிகாத அபராதம் விதிக்க வகை செய்யும் 2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம். சட்டத்தின் 36(2) பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர்களான அகமது பைசால் முகமது அஸ்மி, முகமது ஃபாட்லி முகமது ஜம்ரி மற்றும் மஸியா மாஹயிடி ஆகியோர் இந்த வழக்கை நடத்தும் வேளையில் நா‘யிமா சார்பில் டத்தோ முகமது யூசுப் ஜைனால் அபிடின், எம்.புரவலன் மற்றும் அலெக்ஸ் டான் ஆகியோர் ஆஜராகின்றனர்.


Pengarang :