NATIONAL

அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க தோட்டத் துறைக்கு அனுமதி

பாங்கி, ஜன 23 – தோட்டத் துறை மற்றும் மூலப் பொருள் அமைச்சின் கீழ் தோட்டத் துறைக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.

இந்த தகவலை உள்துறை அமைச்சர் (டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில்) தம்மிடம் தெரிவித்தாக கூறிய அவர், தோட்டத் துறைக்கு மட்டுமே வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தோட்டத் தொழிலைத் தவிர வேறு துறைகளுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்க இனி அனுமதிக்கப்படுவதில்லை என்று உள்துறை அமைச்சும் மனிதவள அமைச்சும் ஒப்புக்கொண்டுள்ளன. இத்தொழில் துறையில் மட்டுமே வெளிநாட்டுத் தொழிலாளர்களை எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்படும் என்று அஸர் சொன்னார்.

கடந்த ஆண்டு டிசம்பர் வரையிலான கணக்கெடுப்பின்படி தோட்டத் துறையில் 40,000 தொழிலாளர்கள் தேவைப்படுவதாக மதிப்பிடுகிறோம்.

ஆகவே, தோட்ட நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமாய் சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற மலேசிய செம்பனை வாரியத்தின் சிறப்பு விருதளிப்பு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தோட்ட நிறுவனங்கள் அந்நியத் தொழிலாளர் தருவிப்பு தோட்டத் துறைக்கு மட்டுமே தவிர மற்ற துறைகளுக்கு அல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஜொஹாரி வலியுறுத்தினார்.


Pengarang :