NATIONAL

ஓய்வூதிய மாற்றுத் திட்டம் மீதான விவாதம் 90ஆம் ஆண்டுகளிலே தொடங்கப்பட்டது – பிரதமர்

ஈப்போ, ஜன 29 : புதிதாகத் தேந்தெடுக்கப்படும் அரசு ஊழியர்களை
ஓய்வூதியம் இல்லாத நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கும் திட்டம்
பொதுச் சேவைத் துறையில் பெரும்பான்மையினராக உள்ள
மலாய்க்காரர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்ற கூற்றை பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

இந்த உத்தேசத் திட்டம் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்ததாகக்
கூறிய அவர், நாடு திவாலாவதையும் அதனால் எதிர்கால சமூகம்
பாதிக்கப்படுவதையும் தடுப்பதற்கு மாற்றுத் திட்டத்தின் அமலாக்கம்
குறித்து வலியுறுத்தப்பட்டது என்றார்.

இந்த விவகாரம் குறித்து நீண்ட காலமாக விவாதித்து வந்துள்ளோம்.
90ஆம் ஆண்டுகளிலே இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எனினும்,
அதனை அமல்படுத்துவதற்கான அரசியல் முனைப்பு இல்லால்
போய்விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

ஓய்வூதியத் திட்டத்தை அகற்றுவதால் மலாய்க்காரர்கள்
இன்னலுக்குள்ளாவார்கள் என்றும் இது ஜசெகவின் பரிந்துரை என்றும்
குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சியினர் இதன் உண்மை நிலவரம் குறித்து
விவாதிக்க தயாராக இல்லை, மாறாக அவர்கள் மதத்தை ஆயுதமாக
எடுக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கத்தின் மாநாட்டைத்
தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பக்கத்தான் ஹராப்பான்
தலைவருமான அவர் இவ்வாறு கூறினார்.

இந்த ஓய்வூதிய முறையை வளர்ச்சியடைந்த பல நாடுகள் அகற்றி
விட்டதை சுட்டிக்காட்டிய அவர், அரசியல்வாதிகளுக்கும் இதன் பின்னர் ஓயவூதியம் இருக்காது என்பதால் அவர்களும் இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

அடுத்து வரும் தேர்தல்களில் போட்டிடும் வேட்பாளர்களுக்கும் இந்த
நிபந்தனை பொருந்தும் என அவர் மேலும் சொன்னார்.


Pengarang :