SELANGOR

லாவோஸ் நாட்டிற்குச் சுற்றுலா ஊக்குவிப்பு பயணத்தைச் சிலாங்கூர் விரிவுபடுத்தியது

ஷா ஆலம், ஜன 29 – இம்மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற ஆசியான்
சுற்றுலா ஆய்வு அரங்கில் (ஏ.டி.எஃப்.) பங்கேற்றதன் மூலம் லாவோஸ்
நாட்டிற்கான சுற்றுலா ஊக்குவிப்பு பயணத்தை டூரிசம் சிலாங்கூர்
விரிவுபடுத்தியுள்ளது.

இவ்வாண்டு இறுதிக்குள் 56 லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் மாநில
அரசின் இலக்கிற்கேற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டூரிசம்
சிலாங்கூரின் வர்த்தகத் தொடர்புப் பிரிவு கூறியது.

ஆசியான் நாடுகளுக்கு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை
அதிகரிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த ஐந்து நாள் ஆய்வு அரங்கில்
அனைத்துலக நிலையிலான பிரசித்தி பெற்ற சுற்றுலா முகவர்கள் கலந்து
கொண்டதாக அது தெரிவித்தது.

இந்த சுற்றுலா ஊக்குவிப்பு பயணத்தின் போது உலு லங்காட் கோம்பாக்
ஜியோபார்க், ஜங்கள் ஸ்கூல் கோம்பாக், பெர்மாத்தாங் குவார்ஸா
கோம்பாக், ஸ்ப்லெஷ்மானியா, ஸ்கை மிரர், ஃபன் பார்க் உள்ளிட்ட
பிரசித்தி பெற்ற சுற்றுலா மையங்களை பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வு அரங்கில் கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்ட சுற்றுலா
ஊக்குவிப்பு முகவர்கள் மத்தியில் சூழியல் சுற்றுலா மற்றும் தீம் பார்க்
எனப்படும் பொழுபோக்கு மையங்களை பிரபலப்படுத்தும் முயற்சிகள்
முன்னெடுக்கப்பட்டன என்று டூரிசம் சிலாங்கூர் குறிப்பிட்டது.

சில குறிப்பிட்ட சுற்றுலாத் துறைகளில் குறிப்பிட்ட நாடுகளை ஈர்க்க
டூரிசம் சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது. உதாரணத்திற்கு மருத்துவச்
சுற்றுலாவுக்கு இந்தோனேசியாவையும் ஷோப்பிங் நோக்கங்களுக்கு
புருணையையும் சூழியல் சுற்றுலாவுக்குச் சிங்கப்பூரையும் ஈர்க்க
விரும்புகிறோம் என அது தெரிவித்தது.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்படவுள்ள சிலாங்கூருக்கு
வருகை தாருங்கள் ஆண்டையொட்டி 70 லட்சம் சுற்றுப்பயணிகளை
ஈர்க்கும் இலக்கை அடைவதற்கு பல்வேறு நாடுகளுடன் பரஸ்பர சுற்றுலா
ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தாங்கள் நடவடிக்கை
மேற்கொண்டு வருவதாகவும் அந்த சுற்றுலா ஊக்குவிப்பு அமைப்பு
குறிப்பிட்டது.


Pengarang :