NATIONAL

இங்கிலாந்து சுற்றுப்பயணிக்கு வெ.100 அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம்- புக்கிட் அமான் விசாரணை

கோலாலம்பூர், ஜன 29 – மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட
இங்கிலாந்து ஜோடியின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி குற்றப்பதிவை
வெளியிட்டதோடு சம்பவ இடத்திலேயே அபராதக் கழிவையும் பெற
முன்வந்த போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கையைச் சித்தரிக்கும்
காணொளி தொடர்பில் புக்கிட் அமான் போக்குவரத்து குற்றப்புலனாய்வு
மற்றும் அமலாக்கத் துறை விசாரணை விசாரணை மேற்கொண்டு
வருகிறது.

இந்த காணொளியை யூடியூப் தளத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில்
தாங்கள் கண்டதாக அத்துறையின் இயக்குநர் டத்தோ முகமது அஸ்மான்
அகமது சப்ரி கூறினார்.

தமது துறையிலுள்ள அதிகாரிகள் மற்று உறுப்பினர்கள் புரியும் குற்றங்கள்
தொடர்பில் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது
என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறிய
அவர், இதன் தொடர்பில் ஆருடங்களை வெளியிட வேண்டாம் என
பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்த விசாரணை தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்து
தகவல் தெரிவிக்கப்படும் என்பதோடு இதன் தொடர்பில் உரிய
நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

அந்த போக்குவரத்து போலீஸ்காரர் இங்கிலாந்து சுற்றுப்பயணிக்குக்
குறிப்பிட்ட தொகையை அபராதமாக விதிப்பதைச் சித்தரிக்கும் காணொளி
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.


Pengarang :