NATIONAL

கடந்தாண்டு நாட்டில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை 40 விழுக்காடு அதிகரிப்பு

புத்ராஜெயா, ஜன 30 – நாட்டில் தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்
எண்ணிக்கை கடந்தாண்டு 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2022ஆம்
ஆண்டில் 183ஆக இருந்த இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை கடந்தாண்டு 256 பேராக உயர்வு கண்டது.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக
மேற்கொள்ளப்பட்ட இலக்கிடப்பட்ட கள ஆய்வின் மூலம் இந்நோய்ப்
பரவல் கண்டறியப்பட்டதாகச் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்
ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

எதிர்வரும் 2030ஆம் ஆண்டிற்குள் தொழுநோய் முழுமையாக
துடைத்தொழிப்பதற்கு ஏதுவாக அந்நோய் கண்டவர்களை அடையாளம்
காணும் பணியைத் தீவிரப்படுத்தும்படி உலக சுகாதார நிறுவனம் விடுத்த
வேண்டுகோளின் அடிப்படையில் இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
என்று அவர் குறிப்பிட்டார்.

முன்கூட்டியே கண்டறிவது மற்றும் நெருங்கிய தொடர்பு மூலம்
இந்நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். விரைவாகச் சிகிச்சை
வழங்குவதன் வாயிலாக இந்நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும்
நிரந்தர முடத்தன்மையை தவிர்க்கவும் இயலும் என்றார் அவர்.

உலக தொழு நோய் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில்
டாக்டர் ஜூல்கிப்ளி இதனைத் தெரிவித்தார். இந்த அனைத்துலக தொழு
நோய் தினம் ஒவ்வோராண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்
கிழமை அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டிற்கான தொழு நோய் தினத்தின்
கருப்பொருள் ‘தொழுநோயை நிறுத்துவோம்‘ என்பதாகும்.

தொழுநோய் நமது மத்தியில் இன்னும் இருக்கிறது. பாதிப்புக்கான
சாத்தியம் அதிகம் உள்ள தரப்பினரை அது பீடிக்கும் வாய்ப்பும் உள்ளது என்ற உண்மையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் நோக்கில் இந்த
தினம் அனுசரிக்கப்படுகிறது.

தொழு நோய்க்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக சருமப்
பயோப்ஸி உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்
ஜூல்கிப்ளி பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

‘மல்டி ட்ரக் தெராப்பி‘ (எம்.டி.டி.) எனப்படும் பன்முகச் சிகிச்சையைப்
பெறுவதன் மூலம் இந்நோயைக் குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சையைத்
தினசரி அடிப்படையில் ஆறு மாதம் முதல் 18 மாதங்கள் வரை தொடர்ந்து
மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.


Pengarang :