NATIONAL

கருத்து வேறுபாட்டினால் பெண் கத்தியால் குத்தப்பட்டார்- விசாரணைக்காகப் பெண் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், ஜன 30 – பெண்மணி ஒருவரை அவரின் சகோதரியின்
தோழி வயிறு உள்பட உடலில் பல பாகங்களில் சரமாரியாகக் குத்திக்
காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் பத்தாங் காலியில் உள்ள பாதிக்கப்பட்ட
பெண்ணின் வீட்டின் முன்புறம் நேற்று நிகழ்ந்தது.

அவ்விரு பெண்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு
காரணமாக நிகழ்ந்ததாக நம்பப்படும் இச்சம்பவம் தொடர்பில் நேற்று
மாலை 4.04 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக உலு சிலாங்கூர்
மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது பைசால் தாஹ்ரின்
கூறினார்.

அப்பெண் 26.5 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கத்தியைப் பயன்படுத்தி
பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் கத்தியால் குத்தியதாகக் கூறிய
அவர், இச்சம்பவத்தில் தோள்பட்டை, இடது மற்றும் வலது கை மற்றும்
தலையில் காயங்களுக்குள்ளான அப்பெண் உடனடியாகச் செலாயாங்
மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார் என்றார்.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியின் தோழி
என நம்பப்படும் 31 வயது பெண் சம்பவ இடத்திற்கு அருகில் கைது
செய்யப்பட்டு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டதாக அவர்
தெரிவித்தார்.

அந்த பெண்ணின் மீது முந்தைய குற்றப்பதிவுகள் இல்லை என்பது
தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 326வது
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

அப்பெண்ணை விசாரணைக்காகத் தடுத்து வைப்பதற்கான அனுமதி இன்று கோல குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பெறப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 03-60641223 என்ற எண்களில் உலு சிலாங்கூர் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :