NATIONAL

பிரதமருக்கு எதிராகக் கொலை மிரட்டல் விடுத்த லோரி ஓட்டுநருக்கு ஆறு மாதச் சிறை

கோலாலம்பூர், ஜன 30 –  டிக்டாக் செயலி வாயிலாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்குக் கடந்தாண்டு கொலை மிரட்டல் விடுத்த லோரி ஓட்டுநருக்கு இங்குள்ள  செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஆறு மாத சிறைத் தண்டனை அளித்து  தீர்ப்பளித்தது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஃபைசால் முகமது (வயது 35) என்பவருக்கு நீதிபதி என்.பிரிசில்லா ஹேமமாலினி இந்த தண்டனையை வழங்கினார்.

தண்டனையை கேட்ட  ஃபைசால் கண்ணீர் விட்டு அழுதார். கடந்தாண்டு நவம்பர் மாதம்  20ஆம் தேதி  மற்றவர்களுக்கு தொந்தரவு தரும்  நோக்கில்  @jaiadani89 என்ற சுயவிவரப் பெயர் கொண்ட டிக்டாக் பதிவில் பிரதமர் அன்வார் மற்றும் இதர அமைச்சர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அந்தப் பதிவு  அதே ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி நண்பகலில் டாங் வாங்கி,  ஜாலான் டோங் ஷினில் உள்ள  உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் வாசிக்கப்பட்டது.

1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233(1)(a) பிரிவு மற்றும் அதே சட்டத்தின்  கீழ் தண்டனை வழங்க வகை செய்யும் 233(3) வது பிரிவின் கீழ் அவ்வாடவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டிருந்தது.

இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு அதிகபட்சமாக 50,000 வெள்ளி அபராதம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும்  விதிக்கப்படும்.


Pengarang :