NATIONAL

இங்கிலாந்து சுற்றுப்பயணியிடம் பணம் கேட்ட விவகாரம்- மூன்று போக்குவரத்து போலீஸ்காரர்கள் தடுத்து வைப்பு

ஈப்போ, ஜன 31- அண்மையில் ஜாலான் சிப்பாங் பூலாய்-கேமரன் மலை
சாலையில் இங்கிலாந்து சுற்றுலா தம்பதியிடம் பணம் கேட்டதாக
எழுந்த புகார் தொடர்பில் மூன்று போக்குவரத்து போலீஸ்காரர்கள்
விசாணைக்காக மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முப்பத்தேழு முதல் 42 வயது வரையிலான அம்மூவரும் பேராக் மாநில
போலீஸ் தலைமையகத்தின் சாலை போக்குவரத்து விசாரணை மற்றும்
அமலாக்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று பேராக் மாநில போலீஸ்
தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 384வது பிரிவின் கீழ் விசாரணை
மேற்கொள்வதற்கு ஏதுவாக அவர்கள் மூவரும் நேற்று தொடங்கி மூன்று
நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் 2009ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 17(ஏ) பிரிவு
மற்றும் 1988ஆம் ஆண்டு தொடர்பு மற்று பல்லுடகச் சட்டத்தின் 233வது
பிரிவு ஆகியவற்றின் கீழும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை
மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

இந்த விசாரணையை புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின்
வகைப்படுத்தப்பட்ட குற்றப்பிரிவு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்
கொண்டுள்ளதாகக் கூறிய அவர், விசாரணை பூர்த்தியானவுடன் அந்த
அறிக்கை சட்டத் துறைத் துணைத்தலைவரிடம் ஒப்படைக்கப்படும்
என்றார்.

இது தவிர சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களுக்கு எதிராக புக்கிட் அமான்
உயர்நெறி மற்றும் தர பின்பற்றல் துறையும் விசாரணை மேற்கொண்டு
வருகிறது. விசாரணையை விரைவாக முடிப்பதற்கு ஏதுவாக
முழுமையான ஒத்ழைப்பை வழங்கும்படி சம்பந்தப்பட்ட மூவரும்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

கடந்த 28ஆம் தேதி வேகக் கட்டுபாட்டை மீறிய குற்றத்திற்கு அபராதம்
விதிக்கப்படாமலிக்க 100 வெள்ளியை இங்கிலாந்து சுற்றுலா தம்பதியிடம்
போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் பெற்றதைச் சித்தரிக்கும் காணொளி
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.


Pengarang :