SELANGOR

மாநகர் அந்துஸ்து பெற்றாலும் வரலாற்றுப் பாரம்பரியமிக்க நகராக கிள்ளான் தொடர்ந்து விளங்கும்

ஷா ஆலம், ஜன 31- நாட்டின் 20வது மாநகராக தரம் உயர்த்தப்பட்டதற்கு
ஏற்ப சிறப்பான சேவையை வழங்கும் கடப்பாட்டை கிள்ளான் மாநகர்
மன்றம் கொண்டுள்ளது.

எதிர்வரும் 2030ஆம் ஆண்டிற்குள் கிள்ளானின் தோற்றத்தை ஒப்பற்ற மற்றும்
வரலாற்றுப் பாரம்பரியமிக்க மாநகர் என்ற நிலைக்குத் தாங்கள்
உயர்த்தவுள்ளதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்புத் துறை
இயக்குநர் நோர்பிஷா மாபிஷ் கூறினார்.

கிள்ளானுக்கு கிடைத்த மாநகர் அந்தஸ்து, வலுவான நிதி நிலை,
திறன்மிக்க, தரம் நிறைந்த மற்றும் அனைத்துலக தரத்தைக் கொண்ட
நகரம் என்பதை அங்கீகரிக்கும் வகையில் உள்ளது என்று அவர்
குறிப்பிட்டார்.

மாநகர் அந்தஸ்தைப் பெறுவதற்கு கடந்த 2016ஆம் ஆண்டு முதல்
கிள்ளான் நகராண்மைக் கழகம் தன்னைத் தயார்படுத்தி வந்துள்ளது.
மாநகர் அந்தஸ்தைப் பெறுவதற்கு 30 கோடி வெள்ளி வருடாந்திர
வருமானத்தைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையை அது எப்போதோ
பூர்த்தி செய்து விட்டது என்றார் அவர்.

மேலும், கிள்ளான் நகரின் மக்கள் தொகை 902,000 பேராக உயர்வு
கண்டுள்ளதோடு மக்கள் வசிப்பதற்கு உகந்த இடமாகவும் இது
உருவாகியுள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தூய்மை விவகாரம் குறித்து கருத்துரைத்த அவர், இவ்விஷயத்தை
தாங்கள் கடுமையாகக் கருதுவதோடு இதற்கு தீர்வு காண அமலாக்க
நடவடிக்கைகளைத் தாங்கள் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறினார்.

கிராமங்கள் மற்றும் லோட் நிலங்களில் வீடு வீடாகச் சென்று
குப்பைகளைச் சேகரிக்கும் திட்டத்தை கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மேற்கொண்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், குப்பைகளைச் சேகரிக்கும் பணியை எளிதாக மேற்கொள்வதற்கு
ஏதுவாக தங்களின் குடியிருப்புகளின் முன் குப்பைத் தொட்டிகளைத் தயார்
செய்து வைக்கும்படியும் அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.


Pengarang :