ANTARABANGSA

காஸாவிலிருந்து முதலாவது சிறார்கள் குழு சிகிச்சைக்காக இத்தாலி வந்தடைந்தது

ரோம், ஜன 31- காஸா போரில் காயமுற்ற 11 சிறார்கள் அடங்கிய முதல்
குழுவினர் தங்களின் பெற்றோர்களுடன் சிகிச்சைக்காக இத்தாலி
வந்தடைந்தனர். அச்சிறார்களுக்கு இத்தாலியிலுள்ள மருத்துவமனைகளில்
தொடர் சிகிச்சை வழங்கப்படும் என்று பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல்
நிறுவனம் (வாஃபா) கூறியது.

நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறார்களுக்குச் சிகிச்சை வழங்கும்
இத்தாலி அரசாங்கத்தின் மனிதாபிமான செயலை ஆக்ககரமான மற்றும்
தெளிவான அரசியல் நிலைகளின் வாயிலாக அங்கீகரிக்க வேண்டும்
என்று இத்தாலிக்கான பாலஸ்தீன தூதர் அபீர் ஓடே கூறினார்.

பாலஸ்தீனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த
வேண்டும் மற்றும் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்ற
நிலைப்பாடும் இதில் உள்ளடங்கியுள்ளது என்று அவர் சொன்னார்.

போரின் காரணமாகக் காஸா பகுதியில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை
67,000த்தை தாண்டியது இஸ்ரேலின் தாக்குதலின் வீரியத்தை
புலப்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்கள் காரணமாக அங்குள்ள 36
மருத்துவமனைகளில் 14 மட்டுமே சிறிய அளவில் செயல்படுகின்றன
என்றும் அவர் சொன்னார்.


Pengarang :