NATIONAL

ஒற்றுமையை வலுப்படுத்துவீர்-இன, சமய உணர்வுகளைத் தொடுவதைத் தவிர்ப்பீர்- சுல்தான் அறைகூவல்

கிள்ளான், பிப் 5 – கிள்ளான் நகரிலுள்ள பல்லின மக்களிடையே நிலவி
வரும் ஒற்றுமையுணர்வு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்
வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து இனத்தினரும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும்
அதேவேளையில் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய
வகையில் இன மற்றும் சமய உணர்வுகளைப் பெரிது படுத்தக்கூடாது
என்றும் அவர் அவர் கேட்டுக் கொண்டார்.

சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நவீன
தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துங்கள். மாறாகச், சமுதாயத்தில்
பிளவுகள் ஏற்படும் வகையில் வெறுப்புணர்வுகளைப் தூண்டுவதையும்
அவதூறு பரப்புவரையும் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அவர்
அறிவுறுத்தினார்.

கிள்ளான் அரச மாநகராக அந்தஸ்து பெற்றது குறித்து இந்நகர மக்கள்
மகிழ்ச்சியடைவார்கன் எனத் தாம் நம்புவதாகக் கூறிய அவர், மாநகரை
குறிப்பாக கிள்ளான் மாநகரின் ஆற்றோரங்களை தூய்மையாக
வைத்திருப்பதில் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

பொது சொத்துகளை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். அதே
சமயம், “கிள்ளான் ஆரோக்கியமான மற்றும் சுபிட்சமான நகரம்“ என்ற
கருப்பொருளுக்கேற்ப அரச மாநகரின் அந்தஸ்தைக் கட்டிக்காக்க வேண்டும்
என்றார் அவர்.

கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர்களும் தங்கள் பணிகளைக்
கட்டொழுங்குடனும் விவேகத்துடனும் மேற்கொள்ள வேண்டும் எனவும்
அவர் ஆலோசனை கூறினார்.

இன்று காலை இங்குள்ள விண்ட்ஹாம் தங்கும் விடுதியில் கிள்ளானை
அரச மாநகராகப் பிரகடனப்படுத்தும் நிகழ்வுக்கு தலைமை தாங்கி
உரையாற்றிய போது மேன்மை தங்கிய சுல்தான் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிள்ளான் நகராண்மைக் கழகம் கிள்ளான் அரச மாநகராக அந்தஸ்து
பெறுவதாக மத்திய அரசு கடந்தாண்டு ஜூலை மாதம் அறிவித்தது. இதன்
வழி நாட்டின் 20வது மாநகராகக் கிள்ளான் உருவாக்கம் கண்டது.


Pengarang :