NATIONAL

கிள்ளான் அரச மாநகர் மன்றத்தில் நிபுணர்களுக்கும் இடமளிக்க வேண்டும்- சுல்தான் வேண்டுகோள்

கிள்ளான், பிப் 5 – கிள்ளான் அரச மாநகர் மன்றத்தில் (எம்.பி.டி.கே.)
அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி நிபுணர்களுக்கும் இடமளிக்க வேண்டும்
என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.

மாநகரின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வதற்கு ஏதுவாக மாநகர் மன்ற
உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டில் குறைந்தது 50 விழுக்காடு பல்வேறு
துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று
சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

கிள்ளான் மாநகரில் வசிக்கும் அனைத்து இன மக்களுக்கும்
பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் மாநகர் மன்ற உறுப்பினர்களின்
நியமனம் இன விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையிலும் இருப்பது அவசியம்
என அவர் நினைவுறுத்தினார்.

மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடனும் உயர்நெறியுடனும்
சேவையாற்றும்படி டத்தோ பண்டார், மாநகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும்
பணியாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தங்களுக்காக அல்லது
குறிப்பிட்டத் தரப்பினருக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது
மற்றும் ஊழலில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்க்கும்படியும்
வலியுறுத்துகிறேன் என்றார் அவர்.

அடிக்கடி களத்தில் இறங்கி மக்களோடு தங்களை ஐக்கியப் படுத்தி
அவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து சிறந்த சேவையை வழங்கும்படி
டத்தோ பண்டார் மற்றும் மாநகர் மன்ற உறுப்பினர்களுக்கு அவர்
உத்தரவிட்டார்.

புகார்கள் கிடைக்கும் வரை காத்திராமல் கலந்துரையாடி விரைந்து
நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையைக் கடைபிடியுங்கள் எனவும்
கூறினார்.

இன்று இங்குள்ள விண்ட்ஹாம் தங்கும் விடுதியில் கிள்ளானை அரச
மாநகராகப் பிரகடனப்படுத்தும் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய
போது சுல்தான் இவ்வாறு சொன்னார்.


Pengarang :