NATIONAL

அரசு அலுவலகங்களை அச்சுறுத்திய அதே நபர் ஜோகூர் போலீஸ் தலைவருக்கும் வெடிகுண்டு மிரட்டல்

ஜோகூர் பாரு, பிப் 13-  வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான மிரட்டலை
தாம் நேற்று காலை மின்னஞ்சல் வழி பெற்றதை ஜோகூர் மாநில
போலீஸ் தலைவர் ஆணையர் எம்.குமார் நேற்று உறுதிப்படுத்தினார்.

அந்த மிரட்டல் கடிதம் ஜோகூர் மாநில போலீஸ் தலைவரின்
அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறிய அவர்,
புக்கிட் சென்சுமில் உள்ள மெனாரா மஜ்லிஸ் பண்டாராயா ஜோகூர் பாரு
கட்டிடத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே நபரின்
கைங்கரியம் இதுவெனச் சொன்னார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட கடிதத்தின் அதே முகவரியை
இந்த மிரட்டல் கடிதமும் கொண்டுள்ளது. ஒரே நபர் இந்த செயலைப்
புரிந்திருக்க வேண்டும் என நாங்கள் சந்தேகிக்கிறோம். அந்நபர்
பயன்படுத்திய மின்னஞ்சல் கணக்கு போலியானது என்று அவர்
தெரிவித்தார்.

அந்த மின்னஞ்சலை அனுப்பிய நபரை அடையாளம் காணும் முயற்சியில்
நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இந்த விசாரணையில் கிடைக்கும்
முன்னேற்றங்கள் குறித்து பின்னர் நாங்கள் அறிவிப்போம் என்றார் அவர்.

நேற்றிரவு இங்குள்ள ஜாலான் லிங்காரான் டாலாமில் ஓப் செலாமாட்
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போலீஸ்காரர்களைச் சந்தித்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநிலத்திலுள்ள பல அரசாங்கக் கட்டிடங்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட
வெடிகுண்டு மிரட்டல் குறித்து வினப்பட்ட போது அவர் இவ்வாறு
சொன்னார்.

அந்த நபர் அனுப்பிய மின்னஞ்சலில் இடம் பெற்றுள்ள தகவல்கள்
பொய்யானவை எனக் கூறிய குமார், மக்களிடையே குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஒரே நபரிடமிருந்து மெனாரா எம்.பி.ஜே.பி. உள்பட மூன்று அரசாங்கக்
கட்டிடங்கள் வெடிகுண்டு மிரட்டலைப் பெற்றதாக ஜோகூர் பாரு மாவட்டப்
போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :