NATIONAL

வினையாக முடிந்த வீடியோ அழைப்பு- கல்லின் மீதிருந்து தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி மரணம்

குவாந்தான், பிப் 13 – வீடியோ அழைப்பில் மும்முரமாக இருந்த நேப்பாள
பிரஜை ஒருவர் கற்குவியலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி மாண்டார்.

இச்சம்பவம் இங்குள்ள தெலுக் தொங்காங்கில் நேற்று நிகழ்ந்தது.
கணேஷ் ராணா (வயது 22) என்ற அந்த ஆடவர் நீரில் தவறி விழுந்தது
தொடர்பில் நேற்று மாலை 5.50 மணியளவில் தாங்கள் புகாரைப்
பெற்றதாகக் குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமது
ஜஹாரி வான் பூசு கூறினார்.

இங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் அந்த ஆடவர்
சீனப்புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தன் சகாக்களுடன் சம்பவ
இடத்திற்கு நேற்று மாலை சென்றதாக அவர் சொன்னார்.

மாலை 4.30 மணியளவில் சம்பவ இடத்தில் இருந்த கற்குவியல் மீது
அமர்ந்தவாறு தன் சகோதரியுடன் வீடியோ அவர் அழைப்பில்
இருந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார்.

அவரின் நண்பர் சட்டென அவரின் சட்டையைப் பிடித்து காப்பாற்ற
முயன்றுள்ளார். எனினும், வேகமான நீரோட்டம் காரணமாக அவரால் தன்
நண்பரைக் காப்பாற்ற இயலாமல் போய்விட்டது என்று வான் முகமது
அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

அந்த ஆடவரைத் தேடும் பணி தெலுக் தொங்காங் முதல் பந்தாய் தெலுக்
செம்படாக் வரை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய அவர், மோசமான
வானிலை காரணமாகத் தேடுதல் பணி நேற்றிரவு நிறுத்தப்பட்டது என்றார்.


Pengarang :