ஷா ஆலம், பிப் 15: புக்கிட் மெலாவத்தி தொகுதியைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் குப்பை பிரச்சனை கட்டம் கட்டமாக  தீர்க்கப்பட்டு வருகிறது.

குப்பைகளை சேகரித்தல், அகற்றுதல் மற்றும் திறந்தவெளியில் எரித்தல் போன்ற பிரச்சனைகள் குறித்து தனது தரப்புக்கு பல புகார்கள் வந்துள்ளது என தொகுதி  ஒருங்கிணைப்பாளர் எஸ்.தீபன் கூறினார்.

“அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்த பிறகு மிகவும் திறமையான கிராமக் கழிவு மேலாண்மை முறையை அறிமுகப் படுத்துவது உட்பட சில உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாங்கள் கிராமத்தின் நலனில் கவனம் செலுத்துவோம்.

“குப்பை சேகரிப்பு சேவையை வழங்குவதோடு கூடுதலாகக் கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் பரஸ்பர ஒத்துழைப்புடன் துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

கம்போங் குவாந்தனில் உள்ள கால்வாய் பிரச்சனை குறித்து தீபன் விளக்கமளித்தார்.

”சாலையை ஒட்டி அமைந்துள்ள கால்வாய், நீண்ட நாட்களாக மோசமான நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையுடன் இணைந்து துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகளை செய்ய முயற்சி  எடுத்து வருகிறோம்.

“அப்பகுதி அவசர தேவைகளுக்கு  நீர் இறைக்கும் பம்புகள்  (வாட்டர் பம்புகள்) தயார் செய்யப்படும்,” என்றார்.

பிப்ரவரி 18 அன்று ஒன் பிளாசா கோலா சிலாங்கூரில் உள்ள ஏபிஇசட் கார்டன் ஹாலில் நடைபெறும் நிதி மற்றும் தேசிய தெக்குன் பற்றிய விளக்கத்திற்கு பிற்பகல் தேநீர் விழாவில் பங்கேற்க கோலா சிலாங்கூர் நாடாளுமன்றத்தில் உள்ள தொழில் முனைவோரைத் தீபன் அழைத்தார்.