SELANGOR

2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டையொட்டி சுற்றுலா இடங்களைப் பிரபலப்படுத்த தீவிர நடவடிக்கை

செர்டாங், பிப் 15 – எதிர்வரும் 2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டாகப்
பிரகடனப்படுத்தப்படுவதை முன்னிட்டு மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற
சுற்றுலா மையங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள்
மத்தியில் பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைளை டூரிசம் சிலாங்கூர்
தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த தீவிர முயற்சிகளின் வாயிலக இவ்வாண்டில் 56 லட்சம்
சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் இலக்கை அடைய முடியும் என்று டூரிசம்
சிலாங்கூர் தலைமை செயல்முறை அதிகாரி அஸ்ருள் ஷா முகமது
நம்பிக்கைத் தெரிவித்தார்.

மாநிலத்திலுள்ள பிரசித்திப் பெற்ற இடங்களை பிரபலப்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நாங்கள் காத்திருக்கப்
போவதில்லை. காரணம், 2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள்
ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 2026 மலேசியாவுக்கு
வருகை தாருங்கள் ஆண்டாகவும் விளங்குகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.

சுற்றுப்பயணிகளின் ஈர்ப்பு மையமாகச் சிலாங்கூர் தொடர்ந்து விளங்குவதை
உறுதி செய்வதற்கான வாய்ப்பினை தாம் தொடர்ந்து தக்க வைத்துக்
கொள்ள வேண்டும். எனினும், இந்த முயற்சியில் ஊராட்சி மன்றங்கள்
உள்ளிட்ட தரப்பினரின் ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவைப்படுகிறது
என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு சிலாங்கூர் இயற்கைச் சுழல் மற்றும் உணவு வாய்ப்பு
கண்டுபிடிப்பு திட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத்
தெரிவித்தார்.

தங்கள் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா மையங்களை
பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் ஊராட்சி மன்றங்களும் ஈடுபட
வேண்டும் என்றும் அஸ்ருள் வலியுறுத்தினார்.

நாம் நிறைய காரியங்களை ஆற்ற வேண்டியுள்ளதோடு அதற்கு ஊராட்சி
மன்றங்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. நம்மிடம் ஷா ஆலம்,
சுபாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா மற்றும் கிள்ளான் ஆகிய நான்கு
மாநகரங்கள் உள்ளன.

இவ்வாண்டில் 56 லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் நமது முயற்சிக்கு
அவர்கள் உதவலாம் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :