NATIONAL

சூரிய சக்தி மூலம் அரசாங்கக் கட்டிடங்களை ஒளிரச் செய்யும் முதல் மாநிலம் சிலாங்கூர்

ஷா ஆலம், பிப் 21- அரசு தலைமைச் செயலகத்தில் சூரிய ஒளியீர்ப்பு
தகடுகளைப் பொருத்தியதன் வழி அரசாங்க கட்டிடங்களுக்குத்
தேவையான மின் சக்தியில் ஒரு பகுதியை சூரிய ஒளி மூலம் பெறும்
நாட்டின் முதலாவது முன்னோடி மாநிலமாகச் சிலாங்கூர் விளங்குகிறது.

நிலையான மற்றும் பசுமை எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் மாநில
அரசின் நோக்கத்திற்கேற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள 0.5
மெகாவாட் சோலார் சக்தி அக்கட்டிடத்தின் மாதாந்திர மின் சக்தி
பயன்பாட்டில் இரண்டு விழுக்காட்டை குறைக்க உதவும் என்று
சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின்
கூறினார்.

இக்கட்டிடத்திற்கான மாதாந்திர மின்சாரக் கட்டணம் 500,000 வெள்ளியாக
இருக்கும் வேளையில் அதில் 8,000 வெள்ளியை மாதந்தோறும்
மிச்சப்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

மாநில அரசு தலைமைச் செயலகத்தில் சூரிய ஒளியீர்ப்புத் தகடுகளைப்
பொருத்தும் பணி கடந்தாண்டு ஆண்டு முற்றுப்பெற்ற வேளையில் கடந்த
ஆகஸ்டு 16ஆம் தேதி முதல் அது செயல்பாட்டில் உள்ளது என்று அவர்
குறிப்பிட்டார்.

இது தவிர, ஒன்பது மாவட்ட மற்றும் நில அலுவலகங்களில் இது
போன்றத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. உலு சிலாங்கூரில் கடந்த
ஜனவரி 17ஆம் தேதி இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட வேளையில் மற்ற
இடங்களில் இதன் மேம்பாடு பல்வேறு கட்டங்களில் உள்ளன என்றார்
அவர்.

இந்த திட்டங்கள் யாவும் முற்றுப் பெற்றவுடன் இதன் மூலம் 1.5
மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இயலும் என்று
அவர் சொன்னார்.

நிலையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரித்து கார்பன் பயன்பாட்டை
குறைக்கும் மாநில அரசின் திட்டத்தை நனவாக்கும் வகையில்
சிலாங்கூரில் உள்ள மாவட்ட மற்றும் நில அலுவலகங்களில் சூரிய
ஒளியீர்ப்புத் தகடுகளைப் பொருத்தும் பணி விரைவில் முழுமை பெறும்
என அவர் தெரிவித்தார்.

அந்த கட்டிடங்களில் சூரிய ஒளியீர்ப்பு தகடுகளைப் பொருத்தும் பணி
இவ்வாண்டு இறுதிக்குள் முற்றுப் பெரும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும்
அவர் குறிப்பிட்டார்.


Pengarang :