NATIONAL

இயற்கை பேரிடர்கள் காரணமாகப் புறநகர் மக்கள், பயிர்களுக்கு அதிக பாதிப்பு

பெட்டாலிங் ஜெயா, பிப் 22- பேரிடர்கள் காரணமாக நாட்டில் 62
விழுக்காட்டு பயிர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக
நகர மற்றும் கிராம திட்டமிடல் இலாகா (பிளான் மலேசியா) வெளியிட்ட
ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

பேரிடர்கள் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது கிராம மக்களே என்பது
இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என்று மலேசிய தொழில்நுட்ப
பல்கலைக்கழகத்தின் பேரிடர் தடுப்பு மற்றும் முன்தயார் நிலை
மையத்தின் இயக்குநர் டாக்டர் அஸ்ஹாரி ரசாக் கூறினார்.

நாட்டில் ஏற்படும் பேரிடர்கள் குறிப்பாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு
காரணமாக 62 விழுக்காட்டு பயிர்கள் பாதிப்புக்குள்ளாகின்றன என்பதை
பிளான் மலேசியாவின் அந்த தரவுகள் காட்டுகின்றன என்ற அவர்
சொன்னார்.

கடந்த 2019 முதல் 2021 வரை சுமார் 30,000 மக்கள் தற்காலிக நிவாரண
மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். நகரங்களை விட
கிராமங்களுக்கு அதிக தாக்கம் ஏற்படுவதை இது புலப்படுத்துகிறது என்று
அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள ஜெயா ஓன் பேரங்காடியின் பி.ஜே. லைப் ஆர்ட்சில் நடைபெற்ற
உலக வெப்பமயம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்ரங்கில்
பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக்
கூறினார்.

இந்த ஆய்வரங்கில் டாக்டர் அஸ்ஹாரியுடன் ஸ்பான் எனப்படும் தேசிய
நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்ல்ஸ் சந்தியாகோ மற்றும் அரசு
சார்பற்ற அமைப்பான கிரீன்பீஸ் கிளைமேட் அண்ட் எனர்ஜியின் பிரதிநிதி
ஹமிஸா சம்சுடின் ஆகியோரும் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டனர்.

கடந்த 2019 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் பேரிடர்கள்
காரணமாக ஏற்பட்ட இழப்பு மற்றும் மரண விகிதம் 200 விழுக்காடு வரை
அதிகரித்துள்ளதாகவும் அஸ்ஹாரி தெரிவித்தார்.

கடந்த 2014 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் வடகிழக்கு
பருவமழை காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் நாட்டிற்கு 610
கோடி வெள்ளி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :