மரண மண்டலமாக மாறும் காஸா- உலகச் சுகாதார நிறுவனத் தலைவர் எச்சரிக்கை

நியூயார்க், பிப் 22 – காஸா  முழுவதும் தற்போது ஒரு “மனிதாபிமானமற்ற” சுகாதார மற்றும் மனிதாபிமான சூழல்  நிலவுவதோடு அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக  என்று உலக சுகாதார நிறுவனத்தின்  தலைவர் நேற்று  எச்சரிக்கை விடுத்தார்.

காஸா ஒரு மரண மண்டலமாக மாறிவிட்டது என்று ஜெனிவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவன  இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாக ஜோர்டான் செய்தி நிறுவனம் (பெட்ரா) தெரிவித்தது.

பெரும்பாலான பிரதேசங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 29,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். இன்னும் பலர் காணவில்லை அல்லது இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

போரினால் அழிக்கப்பட்ட காஸா பகுதி முழுவதும் போர் தொடங்கியதிலிருந்து   கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அபரிமிதமான  முறையில் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் கீழ் இருந்த இந்தப் பிரச்சனை தற்போது  15 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

போர் நீடித்து,  விநியோகம் தடைபடும் பட்சத்தில்  இந்த எண்ணிக்கை  மேலும் உயரும் எனக்கூறிய அவர்,  உலக உணவுத் திட்டம் போன்ற அமைப்புகள் வடக்கு பகுதியை  அணுக முடியாதது குறித்து தனது  ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.

மனிதாபிமானத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

மக்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைக்காதபோதும்  நடக்கக்கூட முடியாதவர்கள் கவனிப்பைப் பெற முடியாத நிலையிலும் நாம் எந்த வகையான உலகில் வாழ்கிறோம்? என அவர் வேதனையுடன் கேள்வியெழுப்பினார்.


Pengarang :