NATIONAL

மலேசியா- உஸ்பெக்கிஸ்தான் உறவுகளில் சுற்றுலாவுக்கு முக்கிய இடம்- தூதர் கூறுகிறார்

கோலாலம்பூர், பிப் 22 – உஸ்பெக்கிஸ்தான் மற்றும் மலேசியா இடையேயான இருதரப்பு உறவுகளில் ஒத்துழைப்பின் தூண்களில் ஒன்றாக சுற்றுலா கருதப்படுகிறது என்று மலேசியாவுக்கான உஸ்பெக்கிஸ்தான் தூதர் கரோமிடின் கடோவ் கூறினார்.

உஸ்பெக்கிஸ்தான் மற்றும் மலேசியாவின் பொருளாதாரத் துறைகளுக்கு சுற்றுலாத் துறை இன்றியமையாதது என்று அவர் சொன்னார்.

உஸ்பெக்கிஸ்தானுக்கு வளமான வரலாறு, கலாச்சாரம், கட்டிடக்கலை மற்றும் உணவு வகைகள் உள்ளன. மலேசிய குடிமக்களுக்கு 30 நாட்களுக்கு விசா இல்லா சலுகையை  நாங்கள் கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு நடைபெற்ற  மலேசியா-உஸ்பெக்கிஸ்தான் பிசினஸ்-டு பிசினஸ் கூட்டத்தின் போது அவர் இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் இரு நாடுகளின் சுற்றுலாத் துறையினர் கலந்துகொண்டனர்.

மலேசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே  நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலான  இந்த நிகழ்வுக்கு   உஸ்பெக்கிஸ்தான் தூதரகம் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் ஏர்வேஸ் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.

தாஷ்கண்ட் மற்றும் கோலாலம்பூருக்கு இடையிலான நேரடி  விமானச் சேவை மூலம் உஸ்பெகிஸ்தான் மற்றும் மலேசியாவை இணைப்பதில் உஸ்பெக்கிஸ்தான் ஏர்வேஸ் முக்கிய பங்கு வகிப்பதாகக் கடோவ் கூறினார்.

கடந்த ஆண்டு மலேசிய தூதுக்குழுவின் பயணத்தின் போது சமர்கண்டில் கையொப்பமிடப்பட்ட சுற்றுலா ஒத்துழைப்பு மீதான  புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உஸ்பெக்கிஸ்தானும் மலேசியாவும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.


Pengarang :