NATIONAL

நாட்டின் வரலாற்றில் சாதனை- கடந்தாண்டில் 32,950 கோடி வெள்ளி முதலீட்டை மலேசியா ஈர்த்தது

கோலாலம்பூர், பிப் 23 – மலேசிய வரலாற்றில் முதன் முறையாக மிக
அதிகமாக அதாவது 32,950 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டை
மலேசியா கடந்தாண்டு அங்கீகரித்தது. கடந்த 2022ஆம் ஆண்டில்
பெறப்பட்ட முதலீட்டைக் காட்டிலும் இது 22 விழுக்காடு அதிகமாகும்
என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அந்த முதலீட்டில் 57.2 விழுக்காடு அந்நிய நாடுகளிலிருந்தும் எஞ்சிய 42.8
விழுக்காடு உள்நாட்டிலிருந்தும் பெறப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த சிறப்பான அடைவு நிலைக்கு 35.1 விழுக்காட்டு உள்நாட்டு முதலீட்டு
அதிகரிப்பும் 15.3 விழுக்காட்டு வெளிநாட்டு முதலீட்டு அதிகரிப்பும் துணை
புரிந்தன என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

நேற்று இங்கு நடைபெற்ற தேசிய முதலீட்டு மன்றக் கூட்டத்தில்
(எம்.பி.என்.) 2/2024 தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இந்த விபரம்
குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

நாட்டின் முதலீட்டுச் சூழலின் அடைவு நிலை மிகவும் பிரமிக்கத்தக்க
வகையில் உள்ளதை இதன் மூலம் காணமுடிகிறது. மடாணி
அரசாங்கத்தின் கடந்த ஓராண்டு கால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம்
மீட்சி பெறுவதையும் எழுச்சி பெறுவதையும் இது பிரதிபலிக்கிறது என்று
அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அணுமுறையின் வாயிலாகக்
கடைபிடிக்கப்படும் நட்புறவு முதலீடு மற்றும் நட்புறவு வர்த்தகக்
கொள்கை பலனளிக்கத் தொடங்கியுள்ளதை இந்த அடைவு நிலை
மறைமுகமாக உணர்த்துகிறது என்றும் அவர் சொன்னார்.

மொத்தம் 5,101 திட்டங்களை உள்ளடக்கிய அந்த முதலீடுகள் வாயிலாக
நாட்டு மக்களுக்கு 127,000 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்
தருவதற்கான சாத்தியம் கிட்டியுள்ளது என்றார் அவர்.


Pengarang :