NATIONAL

உணவுப் பொருள் ஏற்றிச் சென்ற இராணுவ டிரக் கவிழ்ந்தது- ஒருவர் மரணம், ஐவர் காயம்

ஜித்ரா, பிப் 23 –  உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற ராணுவ டிரக் ஜித்ராவுக்கு அருகே
புக்கிட் கெச்சில சங்லுனில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில்  ராணுவ வீரர்
ஒருவர் உயிரிழந்தோடு  மேலும் ஐவர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு போலீசாருக்கு  தகவல்
வந்ததாக குபாங் பாசு மாவட்ட  போலீஸ் துணைத் தலைவர்   டி.எஸ்.பி. சியேன் சுங்
ட்சு தெரிவித்தார்.

புக்கிட்  காயு ஹீத்தாம் எல்லைப் படைப்பிரிவின்  5ஆவது முகாமைச் சேர்ந்த 29 வயது
ராணுவ வீரர் ஓட்டிச் சென்ற அந்த டிரக்,  கப்பளா பாத்தாஸ்  முகாமிலிருந்து
பெர்லிஸ் மாநிலத்தின் புக்கிட் காவ்டர்  முகாமிலுள்ள 30ஆவது படைத்
தலைமையகத்தை நோக்கிச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது தொடக்க கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அந்த டிரக் அடைந்த போது எதிரே வந்த வாகனத்தை
மோதுவதிலிருந்து ஓட்டுநர் தவிர்க்க முயன்ற போது அந்த டிரக்
கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது என்று அவர்
கூறினார்.

குறுகலான மற்றும் செப்பனிடப்படாத சாலை காரணமாக ஓட்டுனரின்  கட்டுப்பாட்டை
இழந்த டிரக்  சாலையை விட்டு விலகி   செம்பனை தோட்டத்திற்குள் நுழைந்தது.

டிரக்கின் பின்புறத்தில் அமர்ந்திருந்த ஐந்து பயணிகளில் ஒருவர் பலத்த காயம் அடைந்து
விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.   காயமடைந்த ஒருவர் ஜித்ரா
மருத்துவமனையிலும் மேலும்  நால்வர்  அலோஸ்டாரில்  உள்ள சுல்தானா
பஹியா மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என
அவர்   தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :