NATIONAL

சீனத் தேயிலை பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்ட 98.3 கிலோ ஷாபு பறிமுதல்

கங்கார், பிப் 23 – மலேசியா-தாய்லாந்து எல்லையில் பேராக், பீடோர் 3வது
பட்டாளத்தைச் சேர்ந்த பொது நடவடிக்கைப் படையினர் (பி.ஜி.ஏ.)
மேற்கொண்ட ஓப் தாரிங் வாவாசான் கெடா/பெர்லிஸ் சோதனை
நடவடிக்கையில் 32 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 98.3 கிலோ
எடையுள்ள ஷாபு வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

அந்த போதைப் பொருள்கள் அடங்கிய எட்டு கருப்பு நிறப்
பொட்டலங்களை ஒரு அதிகாரி மற்றும் எட்டு உறுப்பினர்கள் அடங்கிய
அக்குழு கடந்த திங்கள் கிழமை விடிற்காலை 3.00 மணியளவில் கண்டு
பிடித்ததாகப் பாடாங் பெசார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது
ஷோக்ரி அப்துல்லா கூறினார்.

அந்த கருப்பு பிளாஸ்டிக் பொட்டலங்களைச் சோதனையிட்ட போது,
அதனுள் இருந்த வெள்ளை நிற மூட்டையில் சிறிய அளவிலான 93 சீனத்
தேயிலை பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உள்ளே
98.3 கிலோ எடையுள்ள ஷாபு போதைப் பொருள் மறைத்து
வைக்கப்பட்டிருந்த து விரிவான சோதனையில் தெரியவந்தது என்று அவர்
அறிக்கை ஒன்றில் சொன்னார்.

பொது நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் அந்த
பொட்டலங்களை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகே மூன்று மணி
நேரம் மறைந்திருந்து கண்காணித்ததாக அவர் குறிப்பிட்டார்.

அந்த பொட்டலங்களை எடுக்க யாரும் வராத நிலையில் பி.ஜி.ஏ.
படைப்பிரிவினர் அவற்றைக் கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காகப் பாடாங்
பெசார் மாவட்ட போலீஸ் தலைமையகத்திடம் ஒப்படைத்ததாக அவர்
கூறினார்.

இந்த போதைப் பொருள் பறிமுதல் தொடர்பில் 1952ஆம் ஆண்டு அபாயகர
போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :