NATIONAL

ஐந்து ஆண்டுகளில் முதலீட்டு மோசடித் தொடர்பில் 14,488 புகார்கள்- வெ.134 கோடி இழப்பு

கோலாலம்பூர், பிப் 23 – கடந்த 2019 முதல் 2023 வரையிலான ஐந்தாண்டு
காலத்தில் 134 கோடி வெள்ளியை உட்படுத்திய 14,488 முதலீட்டு
மோசடிப் புகார்களை புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை
பெற்றுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் இத்தகைய குற்றச்செயல்களைத் தடுக்கும்
நோக்கில் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை மலேசிய பங்குச் சந்தை
ஆணையத்துடன் (எஸ்.சி.) இணைந்து செயல்பட்டு வருவதாக
அத்துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.

இதன் தொடர்பில் வர்த்தக குற்றப்புலாய்வுத் துறைக்கும் பங்குச் சந்தை
ஆணையத்தின் அமலாக்கத் துறை இயக்குநருக்கும் இடையே புக்கிட்
அமானில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது என்று அவர் சொன்னார்.

முதலீட்டு வாய்ப்புகளின் நம்பகத்தன்மையை மக்கள் அறிந்து
கொள்வதற்கு ஏதுவாக செயல்முறை ஒன்றை உருவாக்க இரு
தரப்பினரும் இந்த சந்திப்பின் போது இணக்கம் கண்டனர் என்று அவர்
தெரிவித்தார்.

முதலீடு தொடர்பான விபரங்களை மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக
பங்குச் சந்தை ஆணையம் ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது. அத்தளத்தின்
மூலம் முதலீட்டு வாய்ப்புகளின் நம்பகத்தன்மையை அனைவரும் அறிந்து
கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டு மோசடிகளைத் முறியடிப்பதற்கு ஏதுவாக தகவல் பரிமாற்றம்,
நிபுணத்துவம், விசாரணை மற்றும் நடவடிக்கை உள்ளிட்ட கோணங்களில்
ஒத்துழைப்பை நல்குவதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர் என்று
அவர் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்நாட்டில் முதலீட்டு மோசடிகளைத் தடுப்பதில் மேலும் ஆக்ககரமான
மாற்றங்களை இந்த ஒத்துழைப்பின் வழி ஏற்படுத்த முடியும் என்றும்
ரம்லி நம்பிக்கைத் தெரிவித்தார்.


Pengarang :