ஷா ஆலம், மார்ச் 6: அரச  மலேசிய போலீஸ் படை  உறுப்பினர்களை உள்ளடக்கிய சம்பளம் மற்றும் ஊதியங்கள் மறுகட்டமைப்பு செய்வது குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தி வருகிறது.

அனைத்து பொது சேவை உறுப்பினர்களையும் உள்ளடக்கிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மறுசீரமைப்பிற்கான மடாணி அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஏற்ப இது இருப்பதாக துணை உள்துறை அமைச்சர் கூறினார்.

“உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கிய வாழ்வாதார கொடுப்பனவு தொடர்பான ஓர் ஆய்வையும் இந்நடவடிக்கை உள்ளடக்கியது. உதாரணமாக, தற்போது வாழ்வாதார கொடுப்பனவு (காவல்துறையினர்) அவர்களின் இருப்பிடத்திற்கு ஏற்ப வழங்கப்படுகிறது அதாவது மாதத்திற்கு RM200 முதல் RM350 வரை கொடுக்கப்படும்.

மேலும், கோலாலம்பூர் மற்றும் ஜோகூர் பாரு போன்ற நகரங்களில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும்போது இந்த விகிதம் குறைவாக உள்ளது என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது. எனவே இந்த அம்சத்தை மதிப்பிடுவதற்கு KDN பொது சேவைத் துறையிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது” என்று டத்தோஸ்ரீ ஷம்சுல் அநுர் நஸரா கூறினார்.

மக்களவையில் நடைபெற்ற கேள்வி பதில் அமர்வில் டத்தோ முகமட் இசாம் முகமட் (பிஎன்-தம்பின்) அவர்களின் துணைக் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

டத்தோ அவாங் ஹாஷிமின் (பெண்டாங்) கேள்விக்குப் பதிலளித்த ஷம்சுல், காவல்துறை அதிகாரிகள் பெறும் அடிப்படை சம்பளம் நிலையானது அல்ல, ஆனால் எப்போதும் மதிப்பாய்வு செய்யப்படும் என்றார்.

“அதில் அடிப்படை சம்பளம், நிலையான ஊதியம், நிபுணத்துவம் மற்றும் பணி ஆபத்து ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் இதர கொடுப்பனவுகளும் அடங்கும். இவற்றின் மொத்தத் தொகையானது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளமான RM1,500 ஐ விட அதிகமாகும்” என்று அவர் கூறினார்.