NATIONAL

சிறார் குடியுரிமைச் சட்டத்திருத்தம் தொடர்பில் எம்.பி.களுக்கு உள்துறை அமைச்சு விளக்கமளிக்கும்

கோலாலம்பூர், மார்ச் 11- சிறார்களின் குடியுரிமை சம்பந்தப்பட்ட
ஷரத்துகள் தொடர்பில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக்
கொண்டு வரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக தொடர் நிகழ்வுகள் நடத்தப்பட்டு
வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன்
இஸ்மாயில் கூறினார்.

இந்த உத்தேச சட்டத் திருத்தம் தொடர்பில் சில தரப்பினர் எழுப்பியுள்ள
கவலை மற்றும் ஆட்சேபத்திற்கு தெளிவான பதிலை இந்த விளக்கமளிப்பு
நிகழ்வுகள் வழங்கும் என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரம் தொடர்பில் தெளிவான விளக்கத்தை வழங்குவதற்குரிய
வாய்ப்பு எனக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டால் இந்த சட்டத்
திருத்தத்திற்கு தேவையான ஆதரவு (நாடாளுமன்றத்தில்) கிடைக்கும் என
நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்கு 2024ஆம் ஆண்டிற்கான அரச மலேசிய போலீஸ் படையின்
சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வை தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நீண்ட காலமாக அமலில் இருந்து வரும் இந்த ஷரத்துகளை திருத்த
வேண்டிய அவசியம் இல்லை எனத் தாம் கருதுவதால் இந்த சட்டத்
திருத்த மசோதாவுக்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாக பாசீர் கூடாங்
தொகுதி உறுப்பின்ர ஹசான் அப்துல் கரீம் நேற்று கூறியிருந்தது
தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

கைவிடப்பட்ட சிறார்களுக்குக் குடியுரிமை வழங்கும் கூட்டரசு
அரசிலமைப்பின் அட்டவணை இரண்டு, பிரிவு 111, பிரிவு 19(பி)
ஆகியவற்றை திருத்துவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :