ANTARABANGSA

அதிபர் ஸ்டென்மையருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு – மலேசிய-ஜெர்மனி இருவழி உறவுகள் குறித்து பேச்சு

பெர்லின், மார்ச் 12- ஜெர்மனி அதிபர் ஃபிராங்க்-வால்டர்
ஸ்டென்மையருடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று
சந்திப்பு நடத்தினார். மலேசியா மற்றும் ஜெர்மனி இடையிலான இரு வழி
உறவுகளை வலுப்படுத்துவதை இந்த சந்திப்பு நோக்கமாகக்
கொண்டிருந்தது.

ஜெர்மனிக்கு ஆறு நாள் அதிகாரப்பூர் பயணம் மேற்கொண்டு பிரதமர்
அன்வார் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி வந்து சேர்ந்தார். நேற்று
பிற்பகல் 2.00 மணியளவில் (மலேசிய நேரப்படி இரவு 9.00 மணி) அதிபர்
அலுவலகம் அமைந்துள்ள பெல்லவியு மாளிகை வந்தடைந்த பிரதமரை
அதிபர் ஸ்டென்மையர் வரவேற்றார்.

வருகையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்ட பிரதமர் பின்னர்
அதிபருடனான சந்திப்பில் கலந்து கொண்டார்.

கடந்த ஓராண்டு காலத்தில் பிரதமர் அன்வாருக்கும் அதிபர்
ஸ்டென்மையருக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது சந்திப்பு
இதுவாகும். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அதிபர் ஸ்டென்மையர்
மலேசியாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.

புத்ராஜெயாவில் நடைபெற்ற இரு தலைவர்களுக்கும் இடையிலான
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், ஜெர்மனியுடன்
பல்லுயிர், சூழியல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில்
ஜெர்னியுடன் ஒத்துழைப்பை நல்க மலேசியா நம்பிக்கைக்
கொண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

ஜெர்மனி நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை பல்வகைப்படுத்துவதற்கும்
முதலீடு செய்வதற்கும் முக்கிய மையமாக மலேசியா விளங்குவதாக
ஸ்டென்மையர் கூறினார்.

மலேசியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் சுமார் 700 ஜெர்மனி
நிறுவனங்கள் மூலம் இந்நாட்டில் 65,000 வேலை வாய்ப்புகள்
உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :