NATIONAL

காணாமல் போன ஆடவர் விபத்துக்குள்ளான காருக்கு அருகே சடலமாக மீட்கப்பட்டார்

ஜோர்ஜ் டவுன், மார்ச் 13 – நான்கு நாட்களாகத் தேடப்பட்டு வந்த காணாமல்
போனதாகக் கூறப்பட்ட நபர் விபத்துக்குள்ளான தனது காரின் அருகே
சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். ஜாலான் பாயா தெருபோங்கிலிருந்து
ரெலாவ் செல்லும் சாலையின் மலைப்பாங்கான பகுதியில் சுமார் 45
மீட்டர் பள்ளத்தில் விபத்துக்குள்ளான காருக்கு அருகே அவரது உடல்
கண்டுபிடிக்கப்பட்டது.

இருபத்தொன்பது வயதுடைய அந்த ஆடவரின் உடல் காருக்கு வெளியே
காணப்பட்டது. அவர் காரிலிருந்து வெளியே வீசப்பட்டிருக்கலாம் அல்லது
சொந்தமாக வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் தங்களுக்குப்
புகார் கிடைத்ததைத் தொடர்ந்து ஜாலான் பேராக் மற்றும் பாயா
தெருபோங் தீயணைப்பு நிலையங்களிலிருந்து மீட்புக் குழுவின சம்பவ
இடத்திற்கு விரைந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் இயக்குநர் முஸாம்மார் முகமது சாலே கூறினார்.

அந்த ஆடவரின் உடல் முழுவதும் காயங்கள் காணப்பட்டன. மேல்
நடவடிக்கைக்காக அவரது உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது
என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட அந்த ஆடவர் இம்மாதம் 9ஆம் தேதி தனது காதலிக்குச்
சொந்தமான புரோட்டோன் பெசோனா காரில் வீட்டை விட்டு
வெளியேறியதாக அவரின் உறவினரான சியூ என்பவர் கூறினார்.

அன்றைய தினம் பிற்பகல் 1.00 மணியளவில் தங்களைத் தொடர்பு
கொண்ட அந்நபர், ரெலாவ் அருகே அலோர் விஸ்தாவிலுள்ள தங்கள்
வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார் என்றார் அவர்.


Pengarang :