NATIONAL

ஜெர்மனியிடமிருந்து 4,540 கோடி வெள்ளி முதலீட்டு வாய்ப்பு- அமைச்சர் தெங்கு ஸப்ருள் தகவல்

பெர்லின், மார்ச் 13 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் நேற்று
நடத்தப்பட்ட வட்டமேசை மற்றும் நேரடிச் சந்திப்புகளின் வாயிலாக
கிடைப்பதற்குரிய சாத்தியம் உள்ள முதலீட்டின் மதிப்பு 4,540 கோடி
வெள்ளியாகும்.

அந்த சாத்தியமுள்ள முதலீடுகளில் புதிய மற்றும் விரிவாக்கம் காணும்
முதலீடுகளும் பல்வகைப்படுத்தப்பட்ட திட்டங்களும் அடங்கும் என்று
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ
ஸப்ருள் அப்துல் அஜிஸ் கூறினார்.

இந்த சாத்திய முதலீட்டுத் திட்டங்கள் செமிகண்டக்டர், வான்
போக்குவரத்து, மருத்துவ உபகரணங்கள், இரசாயனம் மற்றும் சேவைத்
துறை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதாக அன்வாருடனான வட்ட மேசை
மற்றும் நேரடிச் சந்திப்பு நிகழ்வுக்குப் பிறகு மலேசிய செய்தியாளர்களிடம்
அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் ஜெர்மனி நகரங்களான ஸ்டெர்கட், முனிக், பெர்லின்,
பிராங்க்பெர்ட் ஆகியவற்றோடு பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளையும்
சேர்ந்த 38 தொழில்துறைகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இது தவிர, எக்ஸ்-ஃபேப், மெலேக்சிஸ், இன்ஃபினியன், டெக்னோலோஜிஸ்,
ஸ்கோட் ஏஜி மற்றும் ஏர்பஸ் ஆகிய நிறுவன அதிகாரிகளுடனும் அன்வார்
நேரடிச் சந்திப்பை நடத்தினார்.

ஆறு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு கடந்த
ஞாயிற்றுக்கிழமை பெர்லின் வந்தடைந்த பிரதமர் அன்வார்,
முதலீட்டாளர்களுக்கு வர்த்தக நட்புறவு அணுகுமுறையை கடைபிடிக்கும்
சிறந்த முதலீட்டு மையமாக மலேசியா தொடர்ந்து விளங்கி வரும் என்று
ஜெர்மனியின் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

உலகின் பிரசித்திப் பெற்ற எரிசக்தி, மருத்துவ உபகரணங்கள்,
செமிகண்டக்டர், மின்னியல், இயந்திரவியல், வாகன மற்றும் விமானத்
தயாரிப்புத் தொழில் துறை நிறுவனங்கள் பிரதமருடன் சந்திப்பு நடத்தின.


Pengarang :