NATIONAL

பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்ட நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர், மார்ச் 13 – கம்போங் செராஸ் பாரு விளையாட்டு மைதானத்தில் கடந்த மார்ச் 9  சனிக்கிழமை  இரவு 10.30 மணியளவில் அந்நிய நாட்டுப் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டதாக கூறப்படும் இரண்டு வெளி நாட்டவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) அதிகாலை 1.34 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடமிருந்து   காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்று செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜாம் ஹலீம் ஜமாலுடின் கூறினார்

இருபது மற்றும் 30 வயதுடைய அவ்விரு சந்தேகப் பேர்வழி களையும் கண்டுபிடிப்பதற்காக அதிகாரிகள் மேல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் சொன்னார்.

ஐக்கிய நாடுகள் சபை உயர் தூதரகத்தின்   அகதிகளுக்கான அட்டை வைத்திருக்கும் அம்மாது தனது இரண்டு வயது மகனை அழைத்து வருவதற்காக விளையாட்டு மைதானத்திற்குச் சென்ற போது இத்தாக்குதல் நிகழ்ந்தது.

பாதிக்கப்பட்ட அப்பெண்  குடிபோதையில் இருந்த தனக்கு அறிமுகமான இரண்டு வெளிநாட்டவர்களை நோக்கி ஓடினார். சந்தேக நபர்களில் ஒருவர் அந்தப் பெண்ணிடம் போத்தலைப்  பயன்படுத்தி பெட்ரோல் வாங்கி வரச்  சொன்னார்.

பெட்ரோல் அடங்கிய போத்தலை அப்பெண் சந்தேக நபரிடம் கொடுத்த போது  அந்நபர்கள் இருவரும் பெட்ரோலை ஊற்றி அப்பெண்ணுக்கு  தீ வைத்தனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்

முகம் மற்றும் உடலில் கிட்டத்தட்ட 30 சதவீத தீக்காயங்க்குள்ளான  அந்தப்  பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில்  குழந்தைக்கு சிறிய காயம் ஏற்பட்டது என்றார் அவர்.


Pengarang :