NATIONAL

இஸ்ரேலிய பேரிச்சம் பழங்கள், முட்டைக்கான மானியம் மீது மக்களவையில் இன்று விவாதம்

கோலாலம்பூர், மார்ச் 14 – இன்றைய மக்களவைக் கூட்டத்தில் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேரிச்சம் பழங்கள், மடாணி  கேம்பஸ்  செமாராக் திட்டம் மற்றும் முட்டைக்கான மானியம் உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய இடத்தைப் பெறும்.

இன்றைய அமைச்சர்கள் கேள்வி நேரத்தின் போது, இஸ்ரேலின் பொருட்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை புறக்கணிப்பது, பொருளாதாரத் தடை விதிப்பது என்ற மலேசியாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக அந்நாட்டின் பேரிச்சம் பழங்கள் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட விவகாரத்தில் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின  அமைச்சின் நடவடிக்கைகள் என்ன என்று உலு திரங்கானு தொகுதி பெரிக்கத்தான் உறுப்பினர் டத்தோ ரோசோல் வாஹிட் கேள்வியெழுப்புவார்.

 மடாணி கேம்பஸ் செமாராக் திட்டத்தை ஏற்பாடு செய்வதன் நோக்கம், அதன் தற்போதைய அமலாக்க நிலை மற்றும் இத்திட்டத்தின் வாயிலாக தொடர்புடையத் தரப்பினர் குறிப்பாக மாணவர்கள் அடையும் பலன் குறித்து தம்பின் தொகுதி தேசிய முன்னணி உறுப்பினர் டத்தோ முகமது இசாம் முகமது ஈசா உயர் கல்வியமைச்சரிடம் வினவுவார்.

இதனிடையே, கேள்வி நேரத்தின் போது உதவித் தொகை மற்றும் விலை உச்சவரம்பு திட்டம் ரத்து செய்யப் பட்டதைத் தொடர்ந்து கோழி விலை உயர்வு, கால்நடை உற்பத்தி பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறதா? மற்றும் ஏ.பி.சி கிரேட் முட்டைகளுக்கு உதவித் தொகைத் திட்டம் தொடரப்படுமா என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சரிடம் பாயான் பாரு தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் சிம் ட்ஸி ஸின் வினா தொடுப்பார்.

சாலைகளைப் பழுது பார்க்கும் பணிகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சரிடம் உலு சிலாங்கூர் தொகுதி பெரிக்கத்தான் உறுப்பினர் முகமது ஹஸ்னிஸாம் ஹருண் கேள்வியெழுப்புவார்.


Pengarang :