NATIONAL

இந்திய போதைப் பொருள் கடத்தல் நபருடன் தொடர்பா? மலேசிய தொழிலதிபர் போலீசில் புகார்

கோலாலம்பூர், மார்ச் 14 – இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்று சந்தேகிக்கப்படும்  நபர்  ஒருவருடன்  தொடர்புபடுத்தப்பட்ட டத்தோ மாலிக் என்று அழைக்கப்படும் தொழிலதிபர் டத்தோ அப்துல் மாலிக் தஸ்திகீர் காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அந்த  நபரை தாம்  சந்தித்ததோ அல்லது பேசியதோ கிடையாது  என்று ஒரு சமூக ஊடக பதிவில் அவர் தெளிவுபடுத்தினார்.

நான் மலேசியாவில் ஒரு தொழிலதிபராக இருக்கிறேன். வணிக உலகில், குறிப்பாக திரைப்படத் துறையில் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பும்  சில தரப்பினரும் உள்ளனர் என்று அப்துல் மாலிக் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில்  அவர் டாங் வாங்கி  மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நேற்று புகார் செய்தார். மேலும்,  தமக்கெதிராக போலி செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுப்பதற்காக  அந்த அறிக்கையின் நகலை இங்குள்ள  இந்திய உயர் தூதரகத்திற்கு அனுப்பினார்.

முன்னதாக,  போதைப்பொருள் கடத்தல் மன்னனின் ‘முதலாளி’ என்று கூறப்படும் மலேசிய திரைப்பட விநியோகஸ்தர்,  தமிழ் திரையுலகில் உள்ள பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மலேசியா உட்பட அனைத்துலக  போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால்  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் செய்தி வெளியானது.

இதற்கிடையில், அந்த தொழிலதிபரிடமிருந்து புகாரைப்  பெற்றதை டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நூர் டெல்ஹான் யஹாயா உறுதிப்படுத்தினார்.

இந்தியாவில்  திரைப்படத் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலில் மலேசிய குடிமகன் யாருக்கும் தொடர்பு இல்லை என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ காவ் கோக் சின் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.


Pengarang :