NATIONAL

ஐந்து மாதகாலப் பாலஸ்தீனப் போரில் 72,000 பேர் காயம், 31,112 பேர் உயிரிழப்பு

ரமல்லா, மார்ச் 14- காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்
படையினர் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய கோரத்
தாக்குதல் ஐந்து மாதங்களாக நீடித்து வரும் நிலையில்
இத்தாக்குதல்களில் இதுவரை 72,000க்கும் அதிகமானோர்
காயமடைந்துள்ளனர்.

அனைத்துலகச் சட்டங்களையும் நெறிகளையும் மீறி இஸ்ரேல்
மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் காயமுற்ற ஆயிரணக்கானோர்
சிகிச்சைப் பெறுவதற்கான வாய்ப்புகள் முற்றாகத் தடுக்கப்பட்ட
காரணத்தால் அவர்கள் காயங்களுடன் போராடி உயிரிழக்கும் அவல நிலை
ஏற்படுகிறது.

காஸா தீபகற்பத்தில் போரினால் காயமுற்றவர்கள் எண்ணிக்கை 72,760
பேர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுவதாக பாலஸ்தீன
புள்ளிவிபரத் துறை கூறியது. இது தவிர மேலும் ஆயிரக்கணக்கானோர்
காணாமல் போனதாகவும் அது குறிப்பிட்டது.

இந்த தாக்குதல்களில் இதுவரை 31,112 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பலியானவர்களில் பெரும்பாலோர் சிறார்கள் மற்றும் பெண்களாவர் என்று
புள்ளிவிபரத் துறையை மேற்கோள் காட்டி பாலஸ்தீன செய்தி
நிறுவனமான வாஃபா கூறியது.

கடந்த 2022ஆம் ஆண்டில் இத்தகையத் தாக்குதல்களில் காயமுற்ற
பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10,587 பேராக இருந்ததாக அச்செய்தி
தெரிவித்தது.

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டின் சட்டவிரோத நில
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாகக் கடந்த 2021ஆம் ஆண்டு 16,500
பேர் காயமடைந்தனர்.


Pengarang :