NATIONAL

3.56 கோடி சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதன் வழி 14,710 கோடி வெள்ளி வருமானம் ஈட்ட மலேசியா இலக்கு

ஷா ஆலம், மார்ச் 14 -எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் அனுசரிக்கப்படவிருக்கும்
மலேசியாவுக்கு வருகை தாருங்கள் ஆண்டை முன்னிட்டு 3 கோடியே 56
லட்சம் சுற்றுப்பயணிகளை கவர்வதற்கும் அதன் மூலம் 14,710 கோடி
வெள்ளியை வருமானமாக ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு ஏதுவாக 2020-2030 தேசிய சுற்றுலாக்
கொள்கை மற்றும் 2022-2026 யுக்திகள் மற்றும் சந்தை திட்டங்களுக்கு
ஏற்ப ட்ருலி மலேசியா மற்றும் மலேசிய விடுமுறை ஆகிய இரு சுற்றுலா
ஊக்குவிப்புத் திட்டங்களை வலுப்படுத்துவதில் தமது தரப்பு தீவிரம் காட்டி
வருவதாக சுற்றுலா, கலை, கலாசாரத் துறை துணையமைச்சர் கூறினார்.

அதிகமான வருமானத்தை குறுகிய காலத்தில் ஈட்டுவதற்கு ஏதுவாக
ஆசியான், மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா, கிழக்கு ஆசிய நாடுகளின்
சுற்றுப்பயணிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அவர்
தெரிவித்தார்.

அதிகமான சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்காக அமல்படுத்தப்பட்ட விசா
இல்லாத பயணச் சலுகை சீனா மற்றும் இந்தியாவிலிருந்து அதிகமான
சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்று அவர்
குறிப்பிட்டார்.

மக்களவையில் இன்று ஜூலாவ் தொகுதி உறுப்பினர் டத்தோ லோரி சூன்
எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார். 2026
மலேசியாவுக்கு வருகை தாருங்கள் ஆண்டு பிரசார இயக்கத்தை
முன்னிட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை
மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து டத்தோ லேரி
கேள்வியெழுப்பியிருந்தார்.

அதிக சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்காக அனைத்துலக நிலையிலான
ஊக்குவிப்பு பயணங்கள், சுற்றுலா கண்காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பொது உறவு நடவடிக்கைகள் அதிகளவில் நடத்தப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.


Pengarang :