NATIONAL

வாகனம் மோதி வியாபாரி ஒருவருக்குத் தீக்காயம்

சிரம்பான், மார்ச் 15: கடந்த செவ்வாய்கிழமை, கோலா கிளவாங்கில் கார் என்ஜினை  ஓடிக்கொண்டிருக்க  வாகனத்தில் இரண்டு குழந்தைகளை விட்டு சென்றவரின் செயலால், அவ்வாகனம்  ரம்ஜான் பஜாரில் மோதி வியாபாரி ஒருவருக்குத் தீக்காயம் ஏற்பட்டது.

மாலை 5.45 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் கார் குறிப்பிட்ட வியாபாரியின் கடையை நோக்கிச் சென்று மோதியதில் சூடான எண்ணெய் அவரின் கையில் பட்டு தீக்காயம் ஏற்பட்டது என்று ஜெலுபு மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி மஸ்லான் உடின் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் சூடான எண்ணெய் நிரம்பிய பாத்திரம் விழுந்து 40 வயதுடைய வியாபாரிக்கு தீக்காயம் ஏற்படுத்தியது. இதனால் அவரது உடலின் பின்புறம், தொடை மற்றும் இடது காலில் 25 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது மற்றும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

“ஆறு மற்றும் இரண்டு வயது குழந்தைகள், கண்காணிப்பு இல்லாமல் வாகனத்தில் இருந்துள்ளனர். அவர்களின் பெற்றோர் உணவு வாங்க வெளியே சென்றதாக நம்பப்படுகிறது. மேலும், அக்குழந்தைகள் காரின் ஹேண்ட் பிரேக்குடன் விளையாடியிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்,” என மஸ்லான் உடின் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும், வாகனத்தை விட்டு வெளியேறும் போது என்ஜினை நிறுத்தாமல் சென்றதால் விதி 14(1)(A) சாலை போக்குவரத்து விதிகள் LN 166/59 (விதி 45) இன் கீழ் வழக்கு இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று விசாரணைக்கு உதவுமாறு அல்லது ஜெலுபு புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவின் விசாரணை அதிகாரி சார்ஜென்ட் அசானி ஜூசோவை 016-9752980 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த சம்பவத்தை காட்டும் 20 வினாடி வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

– பெர்னாமா


Pengarang :