NATIONAL

2019 முதல் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 99 கோடி வெள்ளி சொத்துகள் பறிமுதல்

கோலாலம்பூர், மார்ச் 15 – கடந்த 2019ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள்  குற்றங்களுடன்  தொடர்புடைய 99 கோடி வெள்ளி மதிப்புள்ள (21 கோடி அமெரிக்க டாலர்) சொத்துகள் வெற்றிகரமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

போதைப் பொருள் கடத்தல், ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பிற வடிவங்களுக்கு இடையிலான சிக்கலான தொடர்பு களை அடையாளம் கண்டு கடுமையான சட்ட அமலாக்கத்தின் மூலம் அச்சுறுத்தல்களை எதிர்த்து போராடுவதற்குரிய ஆக்ககரமான யுக்திகளை செயல்படுத்துவதில் மலேசியா உறுதியாக உள்ளது என்று அவர் சொன்னார்.

மேலும் எங்களின் சட்ட அமலாக்க துறைகள் 98 ரகசிய ஆய்வகங்களை தீவிர முயற்சியின் பலனாக அகற்றி அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 351 பேரைக் கைது செய்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். ஆயினும் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. வியன்னால் நேற்று போதைப் பொருள் மீதான ஐ.நா. ஆணையத்தின் 67வது உயர்மட்ட நிலையிலான அமர்வில் அவர் சொன்னார்.

மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் உளவியல் சார்ந்த பொருள்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020 முதல் 16,865 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் உற்பத்தி, தயாரிப்பு, கடத்தல், விநியோகம் ஆகிய நடவடிக்கைகளைத் தடுப்பதில் மலேசியா இதர  நாடுகள் மற்றும் அனைத்துலக அமைப்புகளுடன் தொடர்ந்து வலுவான ஒத்துழைப்பை பேணி வரும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :