NATIONAL

சந்தை தேவைக்கேற்ப திறன்பெற்ற ஊழியர்களை உருவாக்க தேசிய திவேட் கொள்கை அமல்

கோலாலம்பூர், மார்ச் 15 – தேசிய தொழில்நுட்ப மற்றும் தொழில்கல்வி
பயிற்சி (திவேட்) கொள்கை வரும் ஜூன் மாதம்
அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில்
நாட்டிற்கு தேவைப்படும் திறன்பெற்ற ஆள்பலத்தை தயார் செய்வதை
இக்கொள்கை முக்கிய இலக்காக கொண்டுள்ளது.

எதிர்வரும் 2050ஆம் ஆண்டு வரையிலான திட்ட வரைபடத்தை கோடிட்டு
காட்டும் இந்த கொள்கை விரிவானதாகவும் நாட்டிலுள்ள 1,345 திவேட்
பயிற்சி மையங்களை ஓருகிணைப்பதாகவும் அமையும் என்று துணைப்
பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.

அதோடு மட்டுமின்றி இந்நோக்கத்திற்காக உயர் தொழில்நுட்பத்தை
அடிப்படையாகக் கொண்ட ஷரத்துகளையும் இது கொண்டுள்ளது. தையல்,
சிகையலங்கரிப்பு போன்ற வழக்கமான பாரம்பரிய துறைகளில் திறன்
பெற்ற தொழிலாளர்களை உருவாக்குவதையும் தாண்டி நாம்
முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

இது போன்ற பயிற்சிகளைத் தொடரும் அதே வேளையில் வேலை
சந்தையில் திறன்பெற்ற ஊழியர்கள் தேவைப்படக்கூடிய செயற்கை
நுண்ணறிவு, சோலார் எரிசக்தி, மின் வாகனம், தொலைத் தொடர்பு மற்றும்
ஹைட்ரோஜன் துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்
தெரிவித்தார்.

பரந்த வாய்ப்புகளைக் கொண்ட திவேட் துறை சார்ந்த பட்டதாரிகளின்
வேலை வாய்ப்பு 92.7 விழுக்காடாக உள்ள வேளையில் சமூகத்தில்
குறிப்பாக பெற்றோர்கள் மத்தியில் இந்த திவேட் திட்டம் இரண்டாம் பட்சத்
தேர்வாக மட்டுமே உள்ளது. இந்த புதிய கொள்கையின் அமலாக்கம் இந்த
சிந்தனைப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்
என்று தேசிய திவேட் மன்றத்தின் தலைவருமான ஜாஹிட் சொன்னார்.


Pengarang :