NATIONAL

தைவான் விவேக நகர் கண்காட்சியில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சிலாங்கூர் கையெழுத்து

ஷா ஆலம், மார்ச் 20 – இம்மாதம் 23ஆம் தேதி வரை தைவான் நாட்டில்
நடைபெறும் தைப்பே விவேக நகர் உச்சநிலை மாநாடு மற்றும்
கண்காட்சியில் சிலாங்கூர் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்
கையெழுத்திடும்.

போக்குவரத்து, ஆராய்ச்சி, விவேக நகர மேம்பாடு, செயற்கை
நுண்ணறிவுக் கல்வி உள்ளிட்ட புத்தாக்க, தொழில்நுட்பத் துறைகளில்
இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதாக முதலீட்டுத் துறைக்கான
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

விவேக மாநிலமாகச் சிலாங்கூரை உருவாக்குவதில் இந்த ஒத்துழைப்பு
புதிய வழிகளை உருவாக்கும் என்று அவர் சொன்னார்.

மாநிலத்தில் போக்குவரத்து முறையில் புரட்சியை ஏற்படுத்துவதற்கு
ஏதுவாக சிடேக் எனப்படும் சிலாங்கூர் மாநில தகவல் தொழில்நுட்ப
மற்றும் இலக்கவியல் பொருளாதாரக் கழகம் தைப்பே மாநகர் அரசின்
தகவல் தொழில்நுட்ப இலாகாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திடும் என்று அவர் சொன்னார்.

புத்தாக்க நடவடிக்கைகளுக்கு மேலும் ஆக்கமூட்டுவதற்காக தைப்பே
கணினி சங்கத்துடன் சீடேக் மேலும் மற்றொரு புரிந்துணர்வு
ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும் என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர, மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிக்கான தொழிலியல் தகவல்
கழகம், விவேக நகர தொழில்நுட்ப முன்னோடித் திட்டம், சுற்றுச்சூழல்,
சமூகவியல், நிர்வாக நெறிமுறை தொடர்பான ஒப்பந்தங்களிலும் சீடேக்
கையெழுத்திடுகிறது என்றார் அவர்.

பட்டதாரிகளுக்கு ஏ.ஐ. கல்வியை வழங்கும் நோக்கிலான சிலாங்கூர்
டிஜிட்டல் பள்ளி, தொடர்பில் தைவான் ஏ.ஐ. அகாடமி, மற்றும் தைவான் ஏ.ஐ. ஆய்வகம் ஆகியவற்றுடன் கையெழுத்தாகும் ஒப்பந்தமும் இதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.


Pengarang :