NATIONAL

டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 3,238 ஆகக் குறைந்துள்ளது

புத்ராஜெயா, மார்ச் 20: கடந்த ஆண்டு மார்ச் 3 முதல் 9 வரையிலான 10 வது தொற்றுநோயியல் வாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 3,238 ஆகக் குறைந்துள்ளது. முந்தைய வாரத்தில் 3,268 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 21,602 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது 35,619 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முகமட் ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.

“டிங்கி காய்ச்சலில் 21 இறப்புகள் பதிவாகியுள்ள. ஆனால், 2023 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 16 இறப்புகள் மட்டுமே பதிவாகி இருந்தன,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மேலும், 10வது தொற்றுநோயியல் வாரத்தில் பதிவான ‘ஹாட்ஸ்பாட்’ இடங்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் உள்ள 184 இடங்களுடன் ஒப்பிடும்போது 178 இடங்களாக குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

சிலாங்கூரில் (151) கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா (12), பினாங்கு (6), சபா (3), நெகிரி செம்பிலான் மற்றும் சரவாக் தலா இரண்டு மற்றும் பேராக் மற்றும் கெடாவில் தலா ஒன்று என பதிவாகியுள்ளது.

ஒவ்வொரு தனிநபரும் டிங்கி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களை ஒழிக்கவும் சுகாதார அமைச்சகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– பெர்னாமா


Pengarang :