NATIONAL

முன்னாள் கைதிகளுக்கு வேலை வாய்ப்பு- ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு தகவல்

ஷா ஆலம், மார்ச் 20 – முன்னாள் கைதிகளை வேலைக்கு அமர்த்துவதற்கான நடவடிக்கையை மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு  துறைக்கான  மாநில ஆட்சிக்குழு மேற்கொண்டு வருகிறது.  இந்த முன்னெடுப்பு   நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைக்கு மட்டும் தீர்வு காண்பதற்கு மட்டுமின்றி கைதிகள் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான இரண்டாவது  வாய்ப்பையும்  வழங்கும் என்று  ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.

அதே வேளையில் , சிறைச்சாலைத் துறையும் முதலாளிமார்கள் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்குப் பதிலாக நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே விடுதலையானவர்கள் (பரோல்), கண்காணிப்பில் உள்ளவர்கள் மற்றும் அனுமதியோடு விடுதலையானவர்கள் ஆகியோரை வேலைக்கு அமர்த்துவதை ஊக்குவிக்கிறது என்றார் அவர்.

முன்னாள் கைதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சியாக பாப்பாராய்டு கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிர்வாக இயக்குநர் டத்தோ ஹாஜி ரம்லி முகமட் தாஹிர் தலைமையிலான குழு, மலேசிய சிறைச்சாலை விவேகப் பங்காளித்துவ நிறுவனம் மற்றும் சமூக பாதுகாப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் (சொக்சோ) சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

வேலை சந்தைக்குப் பொருத்தமான மனித வளத்தை அடையாளம் காணும் முயற்சியாக முன்னாள் கைதிகளை வேலைக்கு அமர்த்தும் நோக்கத்தில் இச்சந்திப்பு நடத்தப்பட்டது.

இந்நடவடிக்கை நாடு அந்நியத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு உதவும் . அதே வேளையில், நாட்டில் முதலாளிமார்கள் எதிர்நோக்கும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைக்குத் தீர்வு காணவும் உதவும் என்று கூறப்படுகிறது.


Pengarang :