ANTARABANGSA

போர் நிறுத்தத்தை அமல்படுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா நெருக்குதல்

கெய்ரோ/வாஷிங்டன், மார்ச் 22- காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை
அமல் செய்வதற்கான தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில்
கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டுள்ள வேளையில் போர் நிறுத்தம்
தொடர்பில் விவாதிப்பதற்காக இஸ்ரேலிய உளவுப் பிரிவுத் தலைவர்
வரும் இன்று கட்டாருக்கு வருகை புரியவிருக்கிறார்.

அமெரிக்கா, கட்டார் மற்று எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக
செயல்படும் இந்த பேச்சு வார்த்தை பாலஸ்தீன போராளிக் குழுவான
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அமல்
செய்யப்படுவதற்குரிய சாத்தியத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க
வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிலிங்கென் கூறினார்.

கட்டாரில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தை ஆறு வாரக் காலப் போர்
நிறுத்தத்தை மையமாகக் கொண்டுள்ளது. இந்த போர் நிறுத்தத்தின் வழி 40
இஸ்ரேலிய பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவதற்கும் அதற்கு கைமாறாக
இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனர்களை விடுதலை
செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படும். மேலும் உணவுப் பற்றாக்குறையினால்
மக்கள் பட்டினியால் வாடும் பகுதிகளுக்கு உதவிப் பொருள்கள்
சென்றடைவதையும் இது உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இடைவெளி
குறுகலாகி வருகிறது. டோஹாவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு
நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம். இது சாத்தியம் என நாங்கள்
கருதுகிறோம் என்று பிலிங்கென் கூறினார்.

போர் முடிவுக்கு வரும் என்பது அமைதிப் பேச்சின் ஒரு அங்கமாக
இருந்தால் மட்டுமே கைதிகளை தாங்கள் விடுவிப்பதாக ஹமாஸ்
கூறுகிறது. தற்காலிக போர் நிறுத்தம் பற்றி மட்டுமே தாங்கள் விவாதிக்க
விரும்புவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுவே இந்த பேச்சு
வார்த்தையின் சிக்கலான மையப் புள்ளியாக உள்ளது.

இந்த பேச்சு வார்த்தையில் ஹமாஸ் நீக்குப்போக்கை கடைபிடிப்பதாகவும்
எனினும் இஸ்ரேல் காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு
வருவதில்லை என்பதில் உறுதியாக உள்ளதாகவும் இந்த அமைதிப்
பேச்சில் தொடர்புடைய பாலஸ்தீன அதிகாரி ஒருவர் ராய்ட்டரிடம்
தெரிவித்தார்.


Pengarang :