SELANGOR

கோல குபு பாரு தொகுதி காலியானது தொடர்பான நோட்டீஸ் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் – மந்திரி புசார்

ஷா ஆலம், மார்ச் 22- கோல குபு பாரு தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் மறைவைத் தொடர்ந்து அத் தொகுதி காலியானதாக அறிவிக்கும் நோட்டீஸ் விரைவில் சட்டமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும்.

வரும் திங்கள்கிழமை நடைபெறவிருக்கும் தொகுதி உறுப்பினர் லீ கீ ஹியோங்கின் நல்லடக்கச் சடங்கிற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதில் தாங்கள் தற்போது கவனம் செலுத்தி வருவதாக மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அதன் பின்னர் காலியான அந்த இடத்தை நிறைவு செய்வதற்கு நாம் தயாராக வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அடுத்தக் கட்ட பணிகளுக்காகக் காத்திருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

இன்று இங்கு நடைபெற்ற மஹாப்பா ரமலான் மடாணி நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வேறு மாதிரியான உத்தரவு வராத பட்சத்தில் அந்த தொகுதியில் ஜசெக சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம், காரணம் அந்த தொகுதி அக்கட்சிக்கு உரியது என்று அவர் குறிப்பிட்டார்.

கீ ஹியோங்கின் உடல் நிலை குறித்து தெரியவந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதியை கவனிக்கும் பொறுப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடினிடம் ஒரு மாதத்திற்கு முன்னர் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

கோல குபு பாரு தொகுதியில் தலைமைத்துவ நிலையில் ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கான பணிகள் கடந்த ஒரு மாத காலமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. இடைத் தேர்தல் முடியும் வரை பணிகளை முறைப்படுத்த ஜமாலியா உதவுவார் என நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.

கோல குபு பாரு தொகுதியில் கடந்த மூன்று தவணைகளாகச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்து வந்த லீ புற்று நோய் காரணமாக நேற்று காலை காலமானார்.

கடந்தாண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் லீ 4,119 வாக்குகள் பெரும்பான்மையில் கெராக்கான் வேட்பாளர் தியோ கியேன் ஹோங்கை தோற்கடித்தார்.


Pengarang :