NATIONAL

ஆற்றில் பதுக்கி வைக்கப்பட்ட 10 லட்சம் வெள்ளி தங்கக் கட்டிகள் மீட்பு

கோலாலம்பூர், மார்ச் 22- ஆற்றுப்படுகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சமூக ஊடக செல்வாக்கு செலுத்தும் நபர் ஒருவருக்குச் சொந்தமானது என கருதப்படும் 10 லட்சம் வெள்ளி மதிப்புள்ள நான்கு தங்கக் கட்டிகள் அடங்கிய பெட்டகத்தை ஜோகூர் மாநிலத்தின் பத்து பஹாட், சுங்கை செம்ப்ரோங்கிலிருந்து போலீசார் மீட்டனர்.

கடந்த மார்ச் 5ஆம் தேதி கைது செய்யப்பட்ட நான்கு நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பலனாக அந்த நகைகள் அடங்கிய பெட்டகம் மீட்கப்பட்டதாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.

சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வுத் துறையினர் (டி4) பத்து பஹாட்டில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 22 முதல் 36 வயது வரையிலான ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் மேல் கட்ட விசாரணைக்காக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

கைது செய்யப்பட்ட ஆடவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் பத்து பஹாட்டில் உள்ள சுங்கை செம்ரோங்கிற்கு கடந்த செவ்வாய்க்கிழமைச் சென்றனர். அங்கு நடத்தப்பட்டச் சோதனையில் புகார்தாருக்குச் சொந்தமான 10 லட்சம் வெள்ளி மதிப்புள்ள நான்கு தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன என்றார் அவர்.

பத்து பஹாட்டிலுள்ள ஒரு வீட்டிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் இதர ஆபரணங்களான 15 தங்கச் சங்கிலிகள், 14 வளையல்கள், தங்க மோதிரங்கள், ஏழு கைப் பைகள், தங்க லோக்கெட் மற்று ரொக்கம் ஆகியவற்றையும் தாங்கள் மீண்டும் கைப்பற்றியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் ரொக்கத் தொகையின் மதிப்பு 21 லட்சம் வெள்ளியாகும் என நேற்று இங்குள்ள வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.


Pengarang :