NATIONAL

மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெற்றவரை தாக்கிய குற்றத்தை இரு பணியாளர்கள் ஒப்புக் கொண்டனர்

சிரம்பான், மார்ச் 26- போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக
சிகிச்சைப் பெற்று வந்த நபரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியதாக
தங்களுக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டு
வரப்பட்ட குற்றச்சாட்டை அந்த மையத்தின் இரு பணியாளர்கள் ஒப்புக்
கொண்டனர்.

நீதிபதி மியோர் சுலைமான் அகமது தர்மிஸி முன்னிலையில் தங்களுக்கு
எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்ட போது அதனை தாங்கள் ஒப்புக்
கொள்வதாக புனர்வாழ்வு மையத்தின் மேலாளரான எம்.ஜேசன் கணேஷ்
(வயது 48) மற்றும் உதவிப் பணியாளரான கெல்வின் ரேய்மெண்ட் (வயது
26) ஆகியோர் இருவரும் கூறினர்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) காலை 11.00 மணியளவில்
நீலாய், லெங்கேங்கில் உள்ள அந்த மையத்தின் நிர்வாக அலுவலக
அறையில் பி.வி.சி. குழாயைக் கொண்டு 38 வயது நபரை தாக்கி
காயப்படுத்தியதாக அவ்விருவருக்கும் எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றவாளி என நீரூபிக்கப்பட்டால் இருபது ஆண்டுகள் வரையிலான
சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்யும்
தண்டனைச் சட்டத்தின் 326வது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 34வது
பிரிவுடன் ஆகியவற்றின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியுள்ளனர்.

அவ்விருவரையும் ஜாமீனில் விடுவிக்க அனுமதி மறுத்த நீதிபதி, வழக்கின்
தீர்ப்பை வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் நோர் ஷியாபினா முகமது
ரிட்டுவான் வழக்கை நடத்திய வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்
சார்பில் வழக்கறிஞர் பெட்ரிக் சாமுவேல் செபஸ்தியன் ஆஜரானார்.


Pengarang :