NATIONAL

சிரியாவிலுள்ள ஈரானிய துணைத் தூதரகம் மீது தாக்குதல் – மலேசியா கண்டனம்

கோலாலம்பூர், ஏப் 3 –  பலருக்கு உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்படும் அளவுக்கு   சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய துணைத் தூதரகக் கட்டிடம் மீது மேற்கொள்ளப்பட்டத்  தாக்குதலுக்கு மலேசியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த துயர சம்பவத்தில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மலேசியா தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது.

அரசதந்திர வளாகங்களை வேண்டுமென்றே குறிவைக்கும் இந்த  செயல் அனைத்துலகச் சட்டம் மற்றும் அரச தந்திர நடைமுறைகளை அப்பட்டமாக மீறும் வகையில் உள்ளது எனவும் அது சாடியது.

அனைத்துலகச்  சட்டத்திற்கு ஏற்ப  தூதரக வளாகங்களை ஒரு நாட்டிற்கான முழுமையான பிரதேசமாக மதிக்கும்படி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் மலேசியா கேட்டுக் கொள்கிறது. பிராந்தியத்தில் நிலவும் மோதலைத் தணிப்பதற்கு உடனடி பேச்சுவார்த்தை அவசியம் என்பதை இது உணர்த்துகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை  மலேசியா வலியுறுத்தும் அதேவேளையில்  பதட்டத்தை அதிகரிக்கக்கூடிய எந்ததொரு சினமூட்டும் செயலையும் தவிர்க்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறது என்று அமைச்சு கூறியது.

நேற்று, பிரதான தூதரக கட்டிடத்திற்கு அடுத்துள்ள துணை தூதரகத்தை குறிவைத்து  இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில்  ஏழு இராணுவ ஆலோசகர்கள் கொல்லப்பட்டதாக  இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை மேற்கோள் காட்டி ஈரானிய செய்தி நிறுவனமான இர்னா தெரிவித்தது.


Pengarang :