NATIONAL

மானிய விலை டீசல் விற்பனைக் கொள்முதலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

சுங்கை பட்டாணி, ஏப் 17- பீடோங்கில் உள்ள வளாகம் ஒன்றில் மானிய விலை டீசல் விற்பனைக் கொள்முதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு நபர்களைப் போலீசார் கைது செய்தனர்.

டீசல் எண்ணெயை டிரெய்லரிலிருந்து இரு லோரிகளுக்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது உள்நாட்டினரான 30 மற்றும் 40 வயதுடைய அவ்விரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அனுவார் அப்துல் ரஹ்மான் அப்துல் ரஹிம் கூறினார்.

கோல மூடா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் சிறப்பு பிரிவு மேற்கொண்ட உளவு நடவடிக்கையில் கிடைத்த தகவலின் பேரில் நேற்று காலை 10.50 மணியளவில் அந்த வளாகத்தை முற்றுகையிட்ட போலீசார் பிற்பகல் 1.40 மணி வரை அங்கு சோதனை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.

மீனவர் சங்கத்திற்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படும் அந்த டிரெய்ரை 30 வயது மதிக்கத்தக்க உள்நாட்டு ஆடவர் ஒட்டி வந்தது தொடக்க க் கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இச்சோதனையின் போது டிரெய்லரில் 27,000 லிட்டர் டீசலும் இரு லோரிகளில் முறையே 800 மற்றும் 2,100 லிட்டர் டீசலும் இருப்பது கண்டறியப்பட்டது என்றார் அவர்.

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் 44,991.84 வெள்ளி மதிப்புள்ள மொத்தம் 29,000 லிட்டர் டீசல் கைப்பற்றப்பட்டது என்று அவர் சொன்னார்.

இம்மாட்டத்திலுள்ள மீனவர்களுக்கு விநியோகிக்கும் நோக்கில் பினாங்கு,
பிறையில் உள்ள ஒரு எண்ணெய் கிடங்கிலிருந்து அந்த டீசல் எடுக்கப்பட்டுள்ளது. வரும் வழியில் சிறிய அளவு டீசலை விற்பனை செய்வதற்காகப் பீடோங்கில் உள்ள வளாகம் ஒன்றில் அந்த ஓட்டுநர் டிரெய்லரை நிறுத்தியுள்ளார். 200 லிட்டர் டீசலை 250 வெள்ளி விலையில் அவ்வாடவர் விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.


Pengarang :