NATIONAL

முக்கிய எரிசக்தி திட்டங்களுக்கு  அடுத்த பத்தாண்டுகளில் வெ.9,000 கோடி தேவை

கோலாலம்பூர், ஏப் 17 –  அடுத்த பத்தாண்டுகளில் எரிசக்தி மாற்றம் தொடர்பான முக்கியமான திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கு மலேசியாவுக்கு  6,000 கோடி
முதல் 9,000 கோடி வெள்ளி வரை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது  என்று இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது தெரிவித்தார்.

அந்த தேவைகளில் பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்துவது,  கிரிட்  எனப்படும் மின்பாதை கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் மனிதவளத் திறன் மேம்பாடு  ஆகியவையும்  அடங்கும் என்று அவர் சொன்னார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் அதிகரித்து வரும் நம்பகத்தன்மையைக் கையாளுவதற்கு ஒரு முக்கியமான கூறாக வலுவான மற்றும் ஏற்றுக் கொள்ளத்தக்க மின்பாதை கட்டமைப்பு இருக்கும் என அவர் தெரிவித்தார்.

மலேசியாவின் தூய்மையான ஆற்றல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு  மதிப்பிடப்பட்ட செலவினம்  எதிர்வரும் 2050 ஆம் ஆண்டுவாக்கில் 18,000 கோடி வெள்ளியை எட்டும் என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் பட்டியலிடப்பட்ட தயாரிப்பு கட்டமைப்புகள் மூலம் நிறுவன மூலதனத்தை திரட்டுதல் (மோபிலிஸ்ட்) எனும் திட்டம் தொடர்பில் மலேசிய பங்குச் சந்தை ஆணையம் மற்றும் இங்கிலாந்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில்  கலந்து கொண்டப் பின்னர் நஸ்மி இதனைத் தெரிவித்தார்.

எரிசக்தி மாற்ற முயற்சிக்கு ஆதரவளிப்பதற்கும் மலேசியாவில் ஐக்கிய நாடுகள் சபையின்  நிலையான வளர்ச்சி இலக்குகளை  முன்னோக்கி  நகர்த்துவதற்கும் ஏதுவாக அதிக முதலீட்டை செயல்படுத்துவதை இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பு நேர்மறையான மாற்றத்திற்கான உந்து சக்தியாக இருக்கும் என்பதோடு  பிராந்தியம் முழுவதும் அதிக பசுமை முதலீடுகளை ஊக்குவிக்கும் என்று அமைச்சர் கூறினார்.


Pengarang :