NATIONAL

ஏப்ரல் 22 வரை 50,000 மூட்டை உள்ளூர் பச்சரிசி நாடு முழுவதும் விநியோகம்

கோலாலம்பூர், ஏப் 24 – சந்தையில் உள்ளூர் வெள்ளை அரிசி பற்றாக்குறையை சமாளிப்பதற்கான  குறுகிய கால முயற்சியாகச் சிறப்பு பி.பி.டி.  திட்டத்தின் மூலம் மொத்தம் 519.36 மெட்ரிக் டன் அல்லது 51,936 மூட்டை உள்ளூர் பச்சரிசி நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த அரிசி விநியோகம் சாத்தியமான மாநில விவசாயிகள் அமைப்புகள் மற்றும் வட்டார தோட்ட அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டது என்று  விவசாய அமைப்பு நிறுவனம் (எல்.பி.பி.) கூறியது.

மொத்தம் 103 விவசாயிகள் அமைப்புகளை உட்படுத்திய இந்த  விநியோக நடவடிக்கை பெலடாங் அவுட்லெட், அக்ரோபசார் பிபி மற்றும் கெடாய் பெலாடாங் போன்ற விற்பனை நிலையங்கள் மூலம்  மேற்கொள்ளப்பட்டது.

விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் இந்த நடவடிக்கை சந்தையில் அரிசி தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்தது.

கடந்தாண்டு 53 லட்சத்து 57 ஆயிரத்து 550 வெள்ளி மதிப்புள்ள 2,101 மெட்ரிக் டன் அல்லது 210,000 மூட்டை அரிசி விநியோகிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்றைய நிலவரப்படி 34 அக்ரோ மடாணி விற்பனைத் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த விற்பனை மதிப்பு 10 லட்சத்து 94 ஆயிரத்து 242 வெள்ளியாகும். இதன் விளைவாக 136,741 வெள்ளி மிச்சமாகியுள்ளது.

இவ்வாண்டு இறுதிக்குள் 78 விற்பனை திட்டங்களை பூர்த்தி செய்யவும்   விவசாய அமைப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் 21 லட்சத்து 50,000 ஆயிரம் வெள்ளி  விற்பனையை உட்படுத்திய 114 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 954 தொழில்முனைவோரின் பங்கேற்பை உள்ளடக்கிய இந்த விற்பனையின் மூலம் 470,000 வெள்ளி சேமிக்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :