NATIONAL

ஓய்வு பெறும் முடிவை ஒத்தி வைத்தார் டோனி பெர்னாண்டஸ்- மேலும் ஐந்தாண்டுகளுக்குப் பணியைத் தொடர ஒப்பந்தம்

கோலாலம்பூர், ஏப் 24 – பணியிலிருந்து ஓய்வுபெறும் முடிவை ஒத்தி வைக்க தாம் ஒப்புக்கொண்டதாகவும் பட்ஜெட் விமான நிறுவனமான  ஏர் ஏசியாவின் நடத்துநரானான  கேப்பிட்டல் ஏ நிறுவனத்தின்  தலைமை செயல் அதிகாரியாகப் பணியைத் தொடர புதிய ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

நிறுவன வாரியக் குழுவில் தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடிவு செய்ததாக அவர் கூறினார்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் தாம்  ஓய்வு பெற விரும்புவதாக கடந்த ஜனவரி மாதம் பெர்னாண்டஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் வாழ்க்கைப் போராட்டத்தை உறுதிசெய்ய ஓய்வெடுக்கும் திட்டத்தை  திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது என்று பெர்னாண்டஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த  2001 ஆம் ஆண்டு ஏர் ஆசியா நிறுவனத்தை மலேசிய அரசாங்கத்திடம் இருந்து   ஒரு வெள்ளிக்கு தனது வணிகப் பங்குதாரரான கமாருடின் மெரானுடன் வாங்கியது முதல் அந்நிறுவனத்தை பெர்னாண்டஸ் வழி நடத்தி வருகிறார்.

இரண்டு விமானங்களுடன் தொடங்கிய ஏர் ஆசியா,  தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு  சேவை வழங்கும்  சுமார் 200 விமானங்களைக் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

இருப்பினும், கோவிட்-19 பெருந்தொற்றினால் அமல்படுத்தப்பட்ட  பயணக் கட்டுப்பாடுகளால்  இந்நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மலேசிய பங்குச் சந்தை ஆணையம்  கேப்பிட்டல்  நிறுவனத்தை  பி என்.17 நிறுவனமாக அதாவது  நிதி ரீதியாகப் பாதிக்கப்பட்ட நிறுவனமாக வகைப்படுத்தியது.

கேப்பிட்டல் ஏ நிறுவனத்தின்  பி என்.17  குறியீட்டை அகற்றுவதற்கு ஏதுவாக  மறுசீரமைப்பு நடவடிக்கையில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறிய பெர்னாண்டஸ், நிறுவனத்தின்  விமானப் போக்குவரத்து இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொற்று நோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :